அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பினார்.

பல்கேரியாவில் இருந்து உடனடியாக விமானம் எதுவும் கிடைக்காததால், ருமேனியா நாட்டிற்குச் சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், அஜித் விமானத்தில் ஏறிவிட்டார். இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

புதன்கிழமை அதிகாலை சென்னை திரும்பிய அஜித், மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அன்று இரவே பல்கேரியாவுக்கு கிளம்பினார்.

அடுத்த முதல்வர் என பரவிய வதந்தி

திடீரென தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் ‘தமிழகத்தின் அடுத்த முதல்வர்’ என நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அஜித்தின் பெயர் பிரதானமாக அடிபட்டது. இதனை சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டது.

இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தைரியம், பண்பு உள்ளிட்டவை அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என கிளம்பி வந்தார். ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

மற்றபடி அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருந்தது கிடையாது. ஆனால், ஜனநாயக ரீதியில் வாக்களிப்பது மட்டுமே கடமை என்று நம்புவார். எதனால் அவருடைய பெயரை இதில் சேர்த்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது” என்று கூறினார்கள்

Related Posts:

  • No Related Posts

«