அதிமுக அரசை நிலைகுலையச் செய்ய மோடி அரசு முயற்சி- இடைக்கால ஏற்பாடு தேவை: திருமாவளவன் #jayalalithaa

சென்னை: தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்துக்கான இடைக்கால ஏற்பாடு இல்லாததால் அதிமுக அரசை நிலைகுலையச் செய்ய மோடி அரசு முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையானது தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முழுமையாக நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

அதனைத் தொடர்ந்து திரு.ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் நலமாக இருந்தபோது அவரது வீடுதேடிச் சென்று விருந்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இதுவரை முதல்வரைப் பார்த்து நலம் விசாரிக்காதது வியப்பளிக்கிறது.

<!–

–>

அதைக்கூட அவரது தனிப்பட்ட விருப்பம் என விட்டுவிடலாம். ஆனால் அவரது கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. சுப்ரமணிய சாமி அவர்கள், “தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும்” என அறிக்கை வெளியிட்டபிறகும் அதனைப் பிரதமர் கண்டிக்காதது மோடி அரசின்மீது ஐயத்தை எழுப்புகிறது. முதல்வரின் உடல் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கர்நாடகத்துக்கு ஆதரவாகக் காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறிப்பதற்கும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நிலைகுலையச் செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

<!–

–>

குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரைக் காண்பதற்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் மருத்துவர்கள் எப்படி வந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது. தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான வேண்டுகோளின்றி, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. அத்தகைய வேண்டுகோள் ஏதுமின்றி, மைய அரசு வலுக்கட்டாயமாக ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை அப்பல்லோவுக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிய வருகிறது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பல்வேறு அய்யங்களை எழுப்புகிறது.

<!–

–>

இந்நிலையில், மைய அரசின் உள்நோக்கம் கொண்ட இத்தகைய முயற்சியை முழுமூச்சுடன் எதிர்ப்பதோடு ஜனநாயகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் முழுமையாக நலம்பெற்று மீண்டும் அரசு அலுவல்களை மேற்கொள்ளவேண்டும் என்பதே நம் அனைவரதும் விருப்பமாகும்.

 

 

<!–

–>

அப்படி அவர் நலமடைந்து திரும்பும்வரை தமிழக அரசின் நிர்வாகத்தை தேக்கமின்றி நடத்திச்செல்ல ‘வெளிப்படையானதொரு இடைக்கால ஏற்பாடு’ செய்யப்படவேண்டியது இன்றியமையாதது ஆகும். அப்படி செய்யாததால்தான் பாஜக அரசு இங்கே குழப்பம் விளைவிக்க முற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

<!–

–>

மாண்புமிகு முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் எவ்வாறு நடக்கிறது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதைக்கூட மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை என சொல்லிக்கொள்ளலாம்.

<!–

–>

ஆனால் காவிரிப் பிரச்சனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சருக்குப் பதிலாக மேற்கொண்டவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. முதல்வரே முடிவுகளை எடுத்திருந்தால் மத்திய அரசின் நிலை தமிழ்நாட்டுக்கு எதிராகத் திரும்பியிருக்குமா என்ற சந்தேகமும் உருவாகிறது.

<!–

–>

“முதலமைச்சருக்குப் பதிலாக தலைமைச் செயலாளரோ, உள்துறை செயலாளரோ ஆட்சியை நடத்துவது சரியல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு குழு நிர்வாகத்தை நடத்தக்கூடாது” என மூத்த பத்திரிகையாளர் திரு என்.ராம் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். முதல்வர் நீண்டகாலத்துக்கு மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்ட நிலையில், முதல்வர் நலம்பெற்றுத் திரும்பும்வரை தமிழகத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்திச்செல்ல அரசியல் சட்டம் வழிகாட்டியுள்ளவாறு ஜனநாயகபூர்வமான முறையில் வெளிப்படையான இடைக்கால ஏற்பாடு ஒன்று செய்யப்படவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

<!–

–>

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி நிர்வாகத் தலைமையை ‘என்ன பெயரில் அழைப்பது’ என்ற கேள்வி முக்கியமல்ல. அந்த ஆட்சி, “அதிகாரிகளின் ஆட்சி என்றில்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியாக” இருக்கவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

<!–

–>

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கும், பாஜக அரசின் சதிச்செயல்களை முறியடிப்பதற்கும் இதுவே சரியான வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

 

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/IejKw3JoN6k/thirumavalavan-slams-centre-9-264678.html

Related Posts:

«