அப்துல் கலாமின் ஆசிரியர்கள் யாழ். மண்ணை சார்ந்தவர்கள்

அப்துல் கலாம் யாழ். மண்ணிற்கு விஜயம் செய்தமை இங்குள்ளவர்களைப் போன்று நாங்களும் மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.கே அப்துல் கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று(15) சனிக்கிழமை முற்பகல் யாழ். பொது நூலகத்தில் இந்தியக் கோர்ணர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி உணர்வு பூர்வ அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ். இந்திய துணை தூதுவர் மேலும் தெரிவித்ததாவது, அப்துல் கலாம் அவர்களின் ஆங்கில, கணித பாட ஆசிரியர்கள் யாழ். மண்ணைச் சார்ந்தவர்கள் என்பதை நினைக்கும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது என்றுள்ளார்.

எந்தத் தமிழனதும், மனிதனதும் பாதம் ஒரு தடவை யாழ். மண்ணில் பதிந்து விட்டால் அவன் நிச்சயம் சொர்க்கத்துக்குத் தான் போவான் என நான் நினைக்கின்றேன் என்றும் அப்படிப்பட்ட சொர்க்கத்தில் அப்துல் கலாமுக்குச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மேடையில் நாங்கள் பேசும் போது சில கற்பனையான விடயங்களையும், சில கதைகளையும் பேசுவோம். ஆனால், இன்று நான் கூறப் போவது சில உண்மைச் சம்பவங்கள்.

அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கை போன்று அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள், திட்டங்கள், எண்ணங்கள் எல்லாமே முன்னுதாரணமான வகையில் அமைந்துள்ளன.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும், இப்படித் தான் வாழ வேண்டும் எனவும் வாழ்க்கை முறைகள் காணப்படுகின்றன. இப்படித் தான் வாழ வேண்டும் என எமக்கு சரியான வழிகாட்டியாக அப்துல் கலாம் வாழ்ந்து காட்டினார் என்றால் அது மிகையாகாது.

மண்ணில் தற்போது அவர் எம்முடன் இல்லாவிட்டாலும் எம்மைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர் என்றும் எம்முடனேயே இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் கலாம் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சில் உயரதிகாரியாகப் பணியாற்றியபோது டெல்லியில் ஒரு கட்டடமும் அதற்குப் பின்னால் ஒரு உயரமான மதில் சுவரும் நிறுவப்படுகின்றது. பாதுகாப்புக்காக மதில் சுவருக்கு மேலே பாதுகாப்புக்காக பணியாளர்கள் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து கொண்டிருந்த போது கண்ணாடித் துண்டுகளை இவ்வாறு பதித்தால் பறவைகள் வந்து உட்கார முடியாது என்று கூறி அந்தப் பணியை நிறுத்தினார்.

நாம் எல்லோரும் நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கும் சூழலில் அவர் பறவைகளின் மகிழ்ச்சியைப் பற்றி நினைத்திருக்கின்றார்.

அவர் ஜனாதிபதியான உடனேயே டில்லியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது. பொதுவாக டில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஜனாதிபதி மாளிகையிலுள்ள நாற்காலி தான் ஜனாதிபதியின் ஆசனமாகக் காணப்படும். ஆறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற குறித்த நிகழ்வில் துணைவேந்தர்களினது நாற்காலிகளுக்கு நடுவில் ஜனாதிபதியின் நாற்காலி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர் பார்த்தவுடன் இந்த நாற்காலியில் உட்கார மறுத்து விட்டார். ஏன் என்று கேட்க ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நாற்காலிகள் போன்று தனக்கும் நாற்காலி வைத்தால் தான் நான் உட்காருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஏனையவர்களின் நாற்காலிகளுக்குச் சமாந்தரமான நாற்காலியை வைத்த பின்னர் அவர் அங்கு உட்கார்ந்தார். அவர் ஒரு நாட்டின் ஜனாதபதியாக இருந்தாலும் ஏனையவர்களையும் தனக்குச் சமாந்தரமாக மதித்து வாழ்ந்து காட்டியவர் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பாடசாலையில் மாணவர்களை சந்திப்பதற்காகச் சென்றிருந்தார். அந்தப் பாடசாலையில் சுமார் 400 வரையான மாணவர்கள் இருந்தார்கள். இன்றைய நிகழ்வில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டது போன்று அன்று அவர் உரையாற்றும் போது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தால் அந்தப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தவித்துப் போனார்கள். அவர் அரங்கத்தின் மத்திக்குச் சென்று மாணவர்கள் அனைவரையும் தனது பக்கத்தில் வரச் சொல்லி மின்சாரம் வந்தது கூட அங்கிருந்தவர்களுக்குத் தெரியாத வகையில் அற்புதமான ஒரு உரையை ஆற்றினார்.

அவர் ஜனாதிபதியாகவிருந்த போது ஒரு தடவை அபுதாபி நாட்டிற்குச் சென்றார். அங்கு இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் 500 பேர் வரை இருக்கிறார்கள். அபுதாபியின் இளவரசரும் இருக்கிறார். அப்போது திடீரென்று ஜனாதிபதியின் செயலாளர் உங்கள் பின்னால் யார் நிற்கிறார் என்று பார்க்குமாறு கூற அவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே நின்றவர் இந்தியாவில் அவருக்கு ஒரு காலத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றியவர். உடனே இளவரசரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அப்துல்கலாம் ஓட்டுநர் நிற்கும் இடத்திற்குச் சென்று அவரை நலம் விசாரித்தோடு பின்னர் மாலை வேளையில் அந்த ஓட்டுநரை அழைத்துச் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசினார்.

இப்படிப்பட்டதொரு எளிமையான மனிதரை உலகத்தில் பார்ப்பது மிக மிகக் கடினம் என கூறினார்.

அவர் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் கேரளாவுக்குச் சென்றிருந்த போது அங்கேயுள்ள அலுவலகத்திற்கு முன்பாக ஒரு செருப்புத் தைக்கும் கூலித் தொழிலாளிக்கு வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே சென்றார். அத்தோடு மத்திய உணவை இருவரும் இணைந்து ஒன்றாக உண்டார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கு மாத்திரம் 340 அறைகளுள்ளன. அங்கு பணி புரியும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவரும் அந்த மாளிகையில் தான்இருப்பார்கள். ஒரு நாள் காலை ஜனாதிபதி அப்துள் கலாம் தன்னுடைய செயலாளரிடம் மழை பெய்த காரணத்தால் என்னுடைய அறையில் நீர்க் கசிவு ஏட்பட்டதால் நேற்றிரவு நான் தூங்கவில்லை என்கிறார். உடனே, செயலாளர் மன்னிப்பு கேட்டார். அதற்கு அப்துல் கலாம் நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை ஏராளமானபணியாளர்கள் ஒரே அறையில் தங்களுடைய குடும்பத்துடன் வாழ்கின்றார்கள். அவர்களின் அறைகளில் இவ்வாறான தண்ணீர்க் கசிவு ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு சிரமப்படுவார்கள் என்று தான் யோசிக்கிறேன் என்றுள்ளார்.

இவ்வாறு பல சம்பவங்களை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் கூறியுள்ளார். இதன் காரணமாக பார்வையாளர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுமபியுள்ளது.

Related Posts:

«