இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்பட்டால்… என்ன நடக்கும்? பரபரப்பு தகவல்கள்


இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்பட்டால், என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்

பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், ‘சமா’ என்னும் தனியார் தொலைக்காட்சிக்கு 2 நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

ஷோகேஸ்சில் (காட்சிப்பெட்டி) வைப்பதற்காக ஒன்றும் நாங்கள் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்துவோம். இந்தியாவை அழிப்போம்’’ என ஆவேசத்துடன் கூறினார்.

அணு ஆயுத மோதல்?

இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதுங்கிய தீவிரவாதிகள், காஷ்மீரிலும், பிற இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு சதிசெய்தது குறித்த தகவல்கள் கிடைத்தன. உடனே அவர்களை தீர்த்துக்கட்ட அதிரடியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதுடன், அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதன் காரணமாக இரு தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை அது அணு ஆயுத மோதலாக வெடித்தால் என்ன ஆகும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் இல்லாமல் போகும்

இதுபற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி எம்.பி., கூறுகையில், ‘‘பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலில் 10 கோடி இந்தியர்கள் பலியானால், இந்தியா திருப்பி தாக்குவதில் பாகிஸ்தான் இல்லாமல் போய்விடும்’’ என்றார்.

அமெரிக்காவின் ருட்கர்ஸ், கொலராடோ–பவுல்டர், கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு வாரத்தில் அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 2 கோடியே 10 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

200 கோடிப்பேருக்கு பாதிப்பு

தெற்காசியாவுக்கான இந்தியா ஸ்பென்ட் அனாலிசிஸ் அமைப்பு, ‘‘இந்தியாவில் பயங்கரவாதிகள் கடந்த 9 ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை போன்று 2,221 மடங்கு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள், படை வீரர்கள் பலியாவார்கள்’’ என கூறுகிறது.

அணு ஆயுதம் பயன்படுத்துவதால் ஏற்படுகிற பருவநிலை மாற்றத்தால் கடும் பசி பட்டினிக்கு ஆளாகி உலகமெங்கும் 200 கோடிப்பேர் பாதிக்கப்படுவார்கள் என அணு ஆயுத போர் தடுப்பு சர்வதேச டாக்டர்கள் சம்மேளனம் கூறுகிறது.

சென்னைக்கு பாதிப்பு?

பாகிஸ்தான் அணுகுண்டு பொருத்திய கண்டம் விட்டு கண்டம் பாய்கிற நடுத்தர ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அது ஏவப்பட்ட இடத்தை பொறுத்து, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்கள் தாக்குதலுக்கு ஆளாகும் என மும்பையில் உள்ள தேசிய பாதுகாப்பு, இன மோதல்கள், தீவிரவாதம் தொடர்பான சிந்தனை பேரவையை சேர்ந்த சமீர் பாட்டீல் கூறி உள்ளார்.

லாகூர், கராச்சியில் இந்தியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், காற்றின் போக்கினால் அது இரு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன.

– Daily Thanthi

Related Posts:

«