இந்தியா மென்பொருள் ஏற்றுமதி செய்கிறது.. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது – மோடி ஆவேசம்

கோழிக்கோடு: இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசியதாவது: 21ம் நூற்றாண்டு ஆசியாவிற்கான நுாற்றாண்டு. ஆசியாவில் ஒரு நாட்டை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளும் சிறப்பாக முன்னேறி வருகின்றன. அந்த ஒரே ஒரு நாடு மட்டும் இதிலிருந்து விலகியுள்ளது.

 India Exports Software, Pakistan Exports Terror - Modi

21ம் நூற்றாண்டை தீவிரவாதத்தின் நூற்றாண்டாக மாற்றுவதே, அந்நாட்டின் இலக்கு. அந்த நாடு உலகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. அவர்கள் ரத்தம் சிந்துவதையும், மக்களை கொல்வதையும், தீவிரவாதத்தையும் விரும்புகிறார்கள்.

இந்தியா ஒருபோதும் தீவிரவாதத்திற்கு அடிபணியாது. அதனை, வெற்றிகொள்ள தீவிர முயற்சி எடுக்கும். அண்மையில் நடந்த யூரி தாக்குதலில் நம் தேசத்திற்காக 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்பதை தீவிரவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் குறிகோள். அதற்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூசிஸ்தான், கில்கிட் விவகாரத்தை கையாள முடியாத தங்கள் தலைவர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

இன்று நான் பாகிஸ்தான் மக்களுடன் இங்கிருந்து நேரடியாக உரையாற்றுகிறேன். 1947க்கு முன்னர் உங்களுடைய தலைவர்கள் இந்த மண்ணை தங்களது மண்ணாக போற்றினர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாளில் சுதந்திரம் பெற்றது.

ஆனால், இருநாட்டின் வளர்ச்சியை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள். இந்தியா மென்பொருள் ஏற்றுமதி செய்யும் போது பாகிஸ்தான் மட்டும் ஏன் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது? என பாகிஸ்தான் மக்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். இரு நாடுகளிலும் உள்ள வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மையை முடிவுக்கு கொண்டு வர போராடுவோம். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/3me8f7JaH6c/india-exports-software-pakistan-exports-terror-modi-263606.html

Related Posts:

«