இரவு விடுதி மோதல் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இரவு விடுதிகளில் மோசமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட பதில் ஊடகத்துறை அமைச்சரான கருணாரத்ன பரணவிதாரன, இது குறித்து வெளிப்படை தன்மையான விசாரணையொன்றை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து வினவப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த பதில் அமைச்சர், “கடந்த 8ஆம் திகதி இவ்வாறான சம்பவமொன்று நடந்ததாக சமூக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டிருந்தன. இந்த மோதலுடன் தஹாம் சிறிசேனவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை என மற்றொரு தரப்பு கூறுகிறது. இது பற்றி அமைச்சரவையில் பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி முடிவுசெய்துள்ளார். பாதுகாப்பு தரப்பிற்கு அவர் தேவையான ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.” என்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாரத்ன பரணவிதாரன, “பொலிஸ் முறைப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிப்படை தன்மையான முழுமையான விசாரணை நடத்தப்படும். இது தவிர ஜனாதிபதி விசாரணை பிரிவும் விசாரணை நடத்துகிறது.  விசாரணை மூலம் இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பது புலனாகும்.” என்றுள்ளார்.

 

Related Posts:

«