இலங்கையை நெருங்கிய அமெரிக்க நாசகாரி

இந்த ஆண்டில் மாத்திரம் அமெரிக்கக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை நாசகாரி கப்பல் ஒன்றுக்கு இலங்கைக் கடல் எல்லைக்குள் வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்த விவகாரம் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வெளிவரவேயில்லை.

யு.எஸ்.எஸ் புளூ ரிட்ஜ், யு.எஸ்.எஸ் நியூ ஓர்லியன்ஸ் ஆகிய கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், மூன்றாவதாக யு.எஸ்.எஸ்.பிராங் கேபிள் கப்பல் வந்த போது கொடுக்கப்படவில்லை.

இதற்கு, ஒரு சில மாதங்களுக்குள் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களின் திடீர் வருகை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும் ஒரு காரணமாக அமையலாம்.

அதனால் கூட, யு.எஸ்.எஸ். ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த விடயம், ஊடகங்களுக்கு கசிய விடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையின் எந்த துறைமுகத்துக்குள்ளேயும், அமெரிக்க ஏவுகணை நாசகாரிக்க கப்பல் நுழையா விட்டாலும் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கைக் கடற்படையினரின் உதவியைப் பெற்றிருந்தது. அந்தக் கப்பல்,

அமெரிக்க கடற்படையின் முன்னோடித் தளபதிகளில் ஒருவரான, அட்மிரல் கிரேஸ் ஹொப்பர் நினைவாக, யு.எஸ்.எஸ் ஹொப்பர் என்று பெயரிடப்பட்ட வழிகாட்டல் ஏவுகணை நாசகாரியே இலங்கைக் கடல் எல்லைக்குள் கடந்த மாதத்தின் இறுதி நாளில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ரொமஹோக், ஹார்பூன் ரக ஏவுகணைகளை ஏவக்கூடிய, நீருக்கடியில் செலுத்தப்படும் டோபிடோஸ் எனப்படும் ஏவுகணைகளை செலுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது இந்த நாசக்காரி.

கடலில் இருந்து தரை, வான் மற்றும் கடல் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை வசதிகளைக் கொண்ட, 154 மீற்றர் நீளம் கொண்ட இந்த நாசகாரி, பேர்ள் துறை முகத்தில் இருந்து, அமெரிக்க கடற் படையின் 5 வது மற்றும் 7 வது கப்பல் படைகளால் கண்காணிக்கப்படும். இந்தோ – பசுபிக் கடற் பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

23 அதிகாரிகள், 24 இளநிலை அதிகாரிகள், 291 கடற்படையினர் பணியாற்றும் இந்தக் கப்பல், கடந்த செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி இலங்கை கரையில் இருந்து 165 கடல் மைல் தொலைவில் பயணம் செய்து கொண்டிருந்த போது தான், அவசர கோரிக்கை ஒன்று கொழும்புக்கு விடுவிக்கப்பட்டது.

செப்டெம்பர் 29 ஆம் திகதி இரவு 9 மணியளவில் யு.எஸ்.எஸ். ஹொப்பர் நாசகாரியின் கட்டளை அதிகாரியான கொமடோர் ஜே.டி.கெய்னி அமெரிக்க கடற்படையின் 15 ஆவது நாசகாரியின் கட்டளை அதிகாரியான கொமடோர் ஜே.டி.கெய்னி அமெரிக்க கடற்படையின் 15 வது நாசகாரிகள் ஸ்குவார்டன் தலைமையகத்துக்கு ஒரு அவசர கோரிக்கை விடுத்தார்.

தமது கப்பலில் உள்ள கடற்படை மாலுமி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

அப்போது யு.எஸ்.எஸ். ஹொப்பர் இலங்கை கரையில் இருந்து 165 கடல் மைல் தொலைவில் இருந்தது. யு.எஸ்.எஸ். ஹொப்பரில், ஹெலிக்கொப்டர்கள் தரித்து நிற்கும் வசதிகள் இல்லை. அவசர தேவைகளுக்கு ஹெலிக்கொப்டர்களைத் தரையிறக்க சமிக்ஞை தொகுதிகள் இருந்தாலும் உடனடியாக அங்கு விரைந்து வரக்கூடிய தொலைவில் அமெரிக்காவின் எந்த விமானங்களோ, ஹெலிக்கொப்டர்களோ இருக்கவில்லை.

இதையடுத்து, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையிடம் உதவி கோரினர்.

இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கு யு.எஸ்.எஸ். ஹொப்பர் நாசகாரிக்கு அனுமதியைக் கொடுத்தார் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி.

அமெரிக்க நாசகாரியில் இருந்து இலங்கை கடற்படைப் படகு மூலம், அமெரிக்க மாலுமியை ஏற்றி வர உத்தரவிட்டப்பட்டது.

நோயுற்றிருந்த மாலுமிக்கு கப்பலில் இருந்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க யு.எஸ்.எஸ். ஹொப்பர் நாசகாரி தனது அதியுச்ச வேகமான 30 நொட்ஸ் வேகத்தில் இலங்கைக்க கடல் எல்லையை நோக்கி விரைந்தது.

மறுநாள் செப்டெம்பர் 30 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் யு.எஸ்.எஸ். ஹொப்பர் இலங்கை கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டது. இலங்கை கடற் படையின் இரண்டு டோறா அதிவேக தாக்குதல் படகுகள், அதனை நெருங்கின.

சுகவீனமுற்றிருந்த அமெரிக்க மாலுமி டோறாவுக்க மாற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

கொழும்பில் உள்ள ஆசிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பற்றப்பட்டார்.

10 மணித்தியாலங்களுக்குள் தமது மாலுமியை பல்வேறு கட்டளைத் தலைமைகள், அரசாங்கங்களையும் தாண்டி தம்மால் காப்பாற்ற முடிந்ததாக யு.எஸ்.எஸ். ஹொப்பரின் கட்டளை அதிகாரி கொமடோர் ஜே.டி.கெய்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இலங்கை கடற்படைகளுக்கு இடையில் உள்ள நெருக்கமான உறவுகளால் தான் இரு சாத்தியமாகியுள்ளது.

அனர்த்த கால உதவி, மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக இலங்கைக் கடற்படைகளுக்கு இடையில் உள்ள நெருக்கமான உறவுகளால் தான் இது சாத்தியமாகியுள்ளது.

அனர்த்தகால உதவி, மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா தொடர்ச்சியான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி வந்திருக்கிறது.

அதைவிட, இத்தகைய அவசரமான, ஆபத்தான தருணங்களில் போர் இல்லாத தேவைகளுக்கு விநியோக மற்றும் ஏனைய வசதிகளை வழங்கும் உடன்பாட்டில் இலங்கையுடன் அமெரிக்கா உடன்பாடு ஒன்றிலும் கையெடுத்திட்டிருக்கிறது.

2007 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட அமெரிக்காவுக்கு இது போன்ற சில வேளையில் கைகொடுத்திருக்கிறது. இதனால் தான், இந்த உடன்பாட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆர்வத்தை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது.

யு.எஸ்.எஸ். ஹொப்பர் இலங்கைக் கரையை நெருங்கி வந்தது எதிர்பாராத ஒன்று என்ற போதிலும் அண்மைக்காலங்களில் அமெரிக்க போர்க்கப்பல்களின் இலங்கை வருகை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள இராஜ தந்திர பாதுகாப்பு உறவுகளின் உச்சம் தான் இதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்கா-இலங்கைக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் இந்தோ-ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது.

இந்தப்பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பில் இலங்கையை முக்கிய பங்காளியாக மாற்றுவதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

ஆனாலும் தாம் அமெரிக்காவைச் சார்ந்து நிற்பதாகக் காட்டிக் கொள்வதற்கு இலங்கை தயாராக இல்லை.

அதனால் தான் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய முப்பெரும் அணுவாயுத வல்லமை கொண்ட நாடுகளின் அதிகாரப் போட்டியின் நிலைக்களமாக மாறியிருக்கும் இந்தோ-ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை நடுநிலை வகிப்பதாக கடந்த 10 ஆம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகிய ஏழாவது ஷியாங்சாங் பாதுகாப்பு மாநாட்டின் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிக்கலான இடத்தில் அமைந்துள்ள இலங்கைத்தீவு, மென்சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அர்த்தம் எல்லாத் தரப்புக்களையும் சமாளித்துப்போக முடியும் என்பது தான். சீனாவில் போய் அவரால் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று கூற முடியாது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சீனாவுக்கான கதவுகளை இலங்கை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும் விநியோகத் தேவைக்கான சீன கப்பல்களையும் வரவேற்போம் என்ற அறிவிப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வெளியிட்ட பின்னர் கூட எந்தவொரு சீன போர்க்கப்பலும் கொழும்புக்கு வரவிரல்லை.

அமெரிக்க-இந்திய கடற்படைகளுடன் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இலங்கை சீனாவையும் புறக்கணிக்கும் நிலையில் இல்லை என்பதையே ஷியாங்சான் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் நிகழ்த்திய உரை எடுத்துக்காட்டுகிறது.

ஆனாலும், யு.எஸ்.எஸ். ஹொப்பரின் நுழைபு போன்ற வெளியே பகிரப்படாத செய்திகள் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரகசிய பாதுகாப்பு உறவுகள் மேலும் மேலும் நெருக்கமடைகின்றன என்பதையே உறுதிப்படுத்துகிறது.

Related Posts:

«