உண்மையில் யார் கடவுள்? விதைக்கப்பட்ட உங்கள் ஆழ் மனதிடம் ஓர் கேள்வி

படித்தவன் முதல் பாமரன் வரையிலும் ஆழ் மனதில் ஊடுருவிப் பாயக்கூடிய ஒரே விடயம் எதுவெனில் கடவுள். இது ஒரு மந்திரச் சொல்லாக இருந்து வருகின்றது. இல்லையென்றும் கூறமுடியாத, இருக்கென்றும் சொல்லமுடியாத ஒரே கேள்வி கடவுள்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவன். அவனின்றி அணு கூட அசையாது சகல பொருட்களுக்கும் செயற்பாடுகளுக்கும் சகலவிதமான ஆற்றல்களுக்கும் மூலப் பொருளாக கடவுள் என்ற சொல்லே காணப்படுகின்றது.

அறிவியல் என்றால் அறிவு இயல், அறிவு சார்ந்த அல்லது அறிவை மேம்படுத்துகின்ற கல்வியை அறிவியல் எனலாம்.

இன்றைய கால கட்டத்திலே கடவுளும் அறிவியலும் ஓரளவிற்கு இணைந்து விட்டார்கள் என அறிவியளாலர்கள் கூறுகின்றனர்.

இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? இல்லையா? என நம்பவும் முடியாமல், மறுக்கவும் முடியாதவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள் அவர்களில் ஒருவனாகவே நானும்….

மனிதன் தன் நாகரிகங்களை தோற்றுவித்த காலம் தொட்டு இன்று வரையிலும் கடவுளானவன் பல்வேறு மாற்றங்களுக்கு உண்டாகி விட்டான் ஆனாலும் அவன் மறுக்கப்படவில்லை.

முன்னர் பஞ்ச பூதங்களை கடவுளாக பார்த்தான். இங்கே பயமே கடவுளுக்கு காரணமாகின்றான் எனலாம். இயற்கை சக்திகள் எங்கே நம்மை அழித்து விடுமோ என சூரியன், நீர், நெருப்பு என அனைத்திலும் தெய்வத்தையே கண்டான் பின்னர் படிப்படியாக மாறத் தொடங்கியது மனிதப்பயணம்.

இயற்கையின் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. உதாரணமாக நிலவினை தெய்வமாக பார்த்த அதே மனிதன் பின்னர் அதனை கிரகமாக ஏற்றுக்கொண்டான். கால் பதித்து அதனை மிதித்தான்.

இவ்வாறான பலவகையான மனித செயற்பாடுகள் கடவுள் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியக் கொண்டு வந்தன. அதில் முக்கியமான தொன்றை உதாரணமாக முன்வைக்கலாம்.

பெரு வெடிப்புக் கோட்பாடு. இக் கோட்பாடு பிரபஞ்சத்தினை கடவுள் படைத்தார் என்பதையே சிறிது அசைத்து பார்த்துவிட்டது.

அண்டத்தின் தோற்றம் பற்றி பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு பெரு வெடிப்பு கோட்பாடு 1929இல் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது என்பதனை அமெரிக்க அறிவியலாளரான எட்வின் ஷப்டின் என்பவர் நிரூபித்ததன் பின்பே வலுப்பெற்று, அது வடிவம் பெற்றது.

சுமார் 370கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அணுக்கள் வெடித்துச் சிதறி பின்னர் ஒன்று சேர்ந்தது. தீப்பிழம்பாக இருந்து குளிர்வடைந்து உருவானதே பூமி என்கின்றனர் அறிவியளாலர்கள்.

வெறும் கூற்று மட்டும் இல்லை இதனை பரிசோதிக்கவும் செய்கின்றனர். ஜெனிவா அருகினில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லை பகுதியினில் சுமார் 08 நாடுகளை சேர்ந்த 8500 இற்கும் மேற்பட்ட இயற்பியல் வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் ஒன்று சேர்ந்து பூமிக்கடியில் அணுக்கதிர்களை ஒன்றுடன் ஒன்றினை வேகமாக மோத விட்டு இதனை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் கடவுள் எங்கு போவார்? நியாயமான சந்தேகம் தானா இது?

கடற்கரையில் கை நிரம்ப ஒரு பிடி மணலை அள்ளி அதில் ஒரு சிறிய மணற்துகளை எடுத்து கொள்வோம். அதனை பூமிக்கு ஒப்பிட முடியும். ஆம், அண்ட வெளிதனில் கணக்கிட முடியாத வகையினில் கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கின்றன. எண்ணில் அடங்காத கிரகங்களையும் சூரியன்களையும் கொண்ட அண்டத்தினில் நாம் மட்டும் தான் மனிதர்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

இந்தக் கூற்றின் படி பார்த்தால் வேற்றுகிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றது என்பது நிச்சயம் எனலாம்.

அப்படியானால் ஒவ்வொரு கிரகத்தில் இருப்பவர்களுக்கும் கடவுள் ஒருவரே தானா? இல்லையேல் வேறு வேறா? புரியவில்லை அண்டம் தோற்றம் பெற முன்னர் அணுக்களின் வெடிப்புக்கும் சேர்க்கைக்கும் ஒரு முடுக்கம் ஆற்றல் தேவை அது தான் கடவுள் என்கின்றனர் ஒரு சிலர். அப்படியாயின் ஆற்றல் தான் கடவுளா?

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மனித மூளையின் உணர் திறனுக்கு அப்பாற்பட்ட உணர்வு, ஒரு சக்தி உண்டு என்பதனை. இயற்கையின் பௌதீக விதிகளை மீறிய செயல்களை செய்ய மனிதர்களால் முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் இவ்வாறான அதீத சக்திகளை கொண்டவர்கள் தான் கடவுளின் தூதுவர்களாக பார்க்கப்படுகின்றனரோ? இல்லை சிவன் சக்தி, புத்தன், இயேசு, அல்லா என அனைத்து கடவுள்களும் இவ்வாறான சக்திகளை கொண்ட மனிதர்கள் தானோ?

செயற்கையாக மழை பொழிய வைப்பது, அண்ட வெளிதனில் சுதந்திரமாக பயணிப்பது உயிர் கொல்லி நோய்களை வெற்றி கொள்வது மனிதனின் உணர்வுகளையும் திறன்களையும் கொண்ட ரோபோக்களை உருவாக்குவது.

என பல்வேறு வகையான அறிவியல் செயற்பாடுகளை செய்து அது கடவுளை சிறிது சிறிதாக அசைக்கின்றது எனலாம்.

இதேவேளை நாகரிகங்களுக்கு ஏற்ப கடவுள்களும் பரிமாணம் அடைந்து கொண்டே வருகின்றார் என்பதே உண்மை.

கடவுள் என்பவர் சிறுவயதிலிருந்து எம் மனதில் விதைக்கப்படுகின்றார். அவரவர் போக்கிற்கேற்ப மாறுபட்டு கொண்டும் வருகின்றார். தனி ஒருவனின் பாதையை நிர்ணயிப்பதற்காகத் தான் கடவுள்.

ஒரு புள்ளியில் இருந்து அண்டம் தோன்றியது என்றால் அதற்கு முன்னர் எது இருந்து? கடவுள் தான் அந்தப் புள்ளியை படைத்தாரா? பின்னர் இது இப்படிதான் என்று வரையறுத்தார். விதிகளை செய்தார். இயற்கையைப் படைத்தார். இவற்றை எல்லாம் செய்து விட்டு எங்கே போனார்? ஒரு வேளை வேலை அதிகமாகி விட்டதால் இன்னும் ஓய்வெடுக்கின்றாரோ?

நாம் வயதாவது மரணிப்பது எல்லாமே புவியில் சுழற்சியால் தானே காலம் என்பது சுழற்சியினால் தானே அப்படியாயின் வேறு ஒரு கிரகித்தில் சுழற்சி மாறுபடும் போது ஆயுளும் அதிகரிக்கும் அப்படியாயின் அக்கிரக மக்கள் மட்டும் புண்ணியம் செய்தவர்களா?

அன்னை தெரேசாவை படைத்த கடவுளா ஹிட்லரையும் படைத்தது. பிறக்கும் முன்பிலிருந்தே மனிதர் தம் பாதுகாப்பை தேடுகின்றனர்.

தாயின் – கருவறை – பெற்றோர்- சொந்தம் – நட்பு இப்படி படிப்படியாக செல்லும் மனிதப் பயணம் அவைகள் எல்லாம் இன்றி தனிமைப்படும் போது அவர்களைத் தாண்டி பணம் படைத்தவர்கள் சக்தி மிக்கவர்கள் தன்னை விடவும் உயர்ந்தவர்களின் தேவைகளை நாடுகின்றது.

இவர்களையும் மீறி நடைபெறும் செயல்களுக்கு காரணமாக சொல்லவும் பழி போடவும் யாரும் இல்லை என்பதால் அங்கு கடவுள் சுட்டிகாட்டப் படுகின்றார்.

மாற்றம் இது ஒன்றே மனித வாழ்வை நிச்சயம் செய்ய வேண்டும். மாற்றங்கள் தன்னாலேயே ஏற்படுத்தப்படுகின்து.

என்ற எண்ணதை மறக்கின்றான் அங்கு அதிஸ்டத்தையும், விதியையும் ஜோதிடத்தையும் நம்புகின்றான் அல்லது அவற்றிற்கு பெயரில்லாத ஒரு சக்தி அல்லது கடவுளை எதிர்ப்பார்க்கின்றான்.

தவம், செபம், தியாகம், யோகம் என்பவற்றில் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் விளைவு நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும் என்பதே. இங்கு மதங்கள் எதற்காக பிரிவினைகள் எதற்காக?

அறிவியலில் அடிப்படை தேடல் தர்க்கம் செய்தல் விடையாக ஒரு கருதுகோளை முன்வைத்தல். பின்னர் ஆய்வு பரிசீலனை இறுதியானதே நிச்சயிக்கப்பட்ட பதிலாகும்.

மூடத்தனமான கேள்விகளுக்கு குருட்டான் போக்கில் பதில் அளிப்பதல்ல அறிவியல் என்பதை பலர் தெரிந்தும் தெரியாதவன் போல் இருப்பது ஏன்?

எல்லா மதங்களிலும் கடவுள் பற்றிய கோட்பாடுகள் கூறப்படுகின்றன மதங்களானவை கடவுள் என்பதை கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத வகையினில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளன. பயத்துடன் கூடிய ஒரு நம்பிக்கை மனித மூளையில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் கடவுள்கள் மதங்கள் தொடர்பான தர்க்கங்களுக்கு விடையில்லாமலே செல்கின்றது. கேள்விகள் அடியோடு மறுக்கபடுகின்றன. இருந்தும் கேள்விகள் எழுப்பப்படுவன் நாத்திகவாதி என்ற ஒரு முத்திரை குத்தப்படுகின்றான்.

பலரது விடையாக அமைவது கடவுள் என்பவர் புலன்களுக்கு அப்பாற்பட்டவர் மனிதனால் கடவுளை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாலேயே அவர் கடவுளாக இருக்கின்றார் என்பதே சரி அப்படி என்றால் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது எல்லாமே கடவுள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

இயற்கை அனர்த்தங்களின் போது தப்பி பிழைத்தவர்கள் அனைவரும் அந்த கடவுள் அருள் என்பர் அப்போது இறந்தவர்களுக்கு காரணம் யார்? படைக்கப்பட்டதன் நோக்கமே இறப்பு என்றால் எதற்கு அந்த படைப்பு?

முற்பிறவிப்பலன் என்பர் பலர் அது காரணம் கூறமுடியாதவைகளுக்கு ஓர் காரணம் அது இயற்கையான விடயங்கள் தவறான மதவாதிகள் கைகளுக்கு சென்று மதங்களுக்கு கடவுள் என்பது பயத்தினூடாக வரையறுக்கப்பட்ட விடயங்களாகிப் போயின.

இயலாமை என்ற காரணங்களுக்காக மனிதன் கடவுளை நிந்திக்கின்றான். லாட்டரியில் எவனோ ஒருவனுக்கு 10இலட்சம் பரிசு என்றால் அவன் அதிஸ்டம் அதுவோ தனக்கு என்றால் இறைவன் கருணை காட்டிவிட்டான் என்பான். ஏன் இந்த வேறுபாடு அப்படி என்றால் அதிஸ்டமும் ஒருவகைக் கடவுள் தானே.

துன்பப்படும் போது தான் கடவுள் அதிகமாக ஒருவனுக்கு தேவைப்படுகின்றான்.

எத்தனை பேர் நலமாக சந்தோஷமாக இருக்கும் போது கடவுளை எண்ணுகிறார்கள்? தேவைகள் பூர்த்தி செய்யும் போது யாரும் இன்னொருவரை தேடுவதில்லை என்பதே உண்மை தத்தம் மனசாட்சிக்கு இது தெரியும்.

இப்படி ஒவ்வொரு விடயமாக இழுத்துக் கொண்டே போனால் இயன்றளவில் இதை முடிக்க முடியாமலே போகும் கடவுள் இல்லை என்றே சொல்லி விட்டால் சரி தானே என திட்டுபவர்களுக்கு இருக்கலாம் எழுதத் தொடங்கி விட்டால் முடித்து தானே ஆக வேண்டும்.

தனி நபர் எனும் கடவுள் இல்லை எனலாம் மேற்பட்ட அல்லது சக்திகளுக்கு எல்லாம் ஓர் சக்தி அதுவே கடவுள் என்றால் என்னைப் பொருத்தவரையிலும் அதுவும் பொய் என்பேன் காரணம் விடை தெரியாத கேள்விகளுக்கு மட்டுமே கடவுள் காரணமாகின்றான். விடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலோ மாறிவிடுகின்றான்.

ஒழுக்கம், நீதி, அன்பு, இயற்கையுடன் ஒன்றிய மனிதம், விழுமிய மாண்புகள் இவையெல்லாமே கடவுளின் ஆக்கமாக்கப்படுகின்றன. மதங்கள் போதிப்பவையும் இவற்றினையே அது தவறான போதனைகளின் மூலம் பயமுறுத்தப்படுகின்றன கட்டுபடுத்தப்டுகின்றன.

தற்போது மாறிவரும் அல்லது மாற்றப்பட்டு வரும் உலகைக் காண்பதில் இருந்து தெளிவாகின்றது கடவுள் என்பது வார்த்தையாக மட்டுமே காணப்படுகின்றது என்பதனை.

நாத்திகவாதிகளாக வர்ணிக்கப்படுபவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றே விதைக்கப்பட்டு விட்டது காரணம் பயம். இறப்பிற்கு பயம் முதுமைக்கு பயம் நோய்க்கு பயம் நடந்ததை கண்டு பயம் நடக்கப்போவதை நினைத்தும் பயம் நரகம் பயம், நகரத்தில் தண்டனைகளுக்கும் பயம் தவறுகள் பாவங்கள் இதனால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அதுவும் இறந்த பின்னர்தான்.

இவ்வாறு பயம் வாழ்வதோடு சிருஷ்டிக்கப்பட்டு விட்டது இப்படிப்பட்ட பயம் மட்டும் தான் வாழ்வா? ஓர் அன்பான கடவுள் எங்கே? இதற்கு பதிலாக அதுவே எண்ணங்கள் எனலாம்.

வாழ்வின் அர்த்தம் என்ன? பொது நலம் மிக்க, சுய நலம் அற்ற, வாழ்வின் நிறைவை பெற தனிநபர்களைத் தாண்டி சமூகத்தில் ஒழுக்கம் மிக்க மாற்றங்களை ஏற்படுத்த மனித நேயம் மிகுந்த, ஏழ்மை, துயரம், வறுமை, பசி, பஞ்சம் இல்லாத ஊர் உலகைக் காண வரையரை தேவைப்படும் அந்த வரையரை மட்டுமே கடவுள் எனலாம்.

கட-உள், பகுத்து-அறி உன் உள்ளேயே கடவுள் பகுத்து அறிவோம்.

(மதக்கருத்துகளை தாக்கியோ அல்லது மதங்களை புண்படுத்தும் நோக்கிலோ இது எழுதப்படவில்லை)

Related Posts:

«