ஐந்தாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி.. தொடரையும் கைப்பற்றியது

விசாகபட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இம்முறை எப்படியும் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடுவோம் என்று கொக்கரித்த நியூசிலாந்து, அமித் மிஸ்ராவின் சுழலில் மூழ்கி இம்முறையும் வெறுங்கையோடு தாயகம் திரும்பியது.

3 டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட இந்தியா வந்தது நியூசிலாந்து. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் மூன்று டெஸ்டுகளிலும் தோற்று வொயிட் வாஷ் ஆனது நியூசிலாந்து.

டோணி தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், தரம்சாலா மற்றும் மொகாலியில் நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து தோற்றது. டெல்லி மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றது. எனவே தொடரின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 5வது போட்டி இன்று விசாகபட்டினத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.

டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.

India cricket

அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 70, விராட் கோஹ்லி 65, டோணி 41 ரன்கள் எடுத்தனர். ரோகித் ஷர்மா இந்த தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். அஜிங்ய ரஹானே 20, அக்ஷர் பட்டேல் 24 ரன்கள் எடுத்தனர். கேதர் ஜாதவ் 39 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 1 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பௌல்ட் மற்றும் சோடி தலா 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீசம் மற்றும் மிட்சேல் சான்டர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 270 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்துக்கு முதல் ஓவரின் 4வது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. உமேஷ் யாதவ் பந்தில் மார்டின் கப்தில் பௌல்ட் ஆகி விக்கெட்டை பறி கொடுத்தார். இதையடுத்து டோம் லதாமுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க முயன்றார். அணியின் ஸ்கோர் 28ஆக உயர்ந்தபோது பும்ரா இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். லதாம் 19 ரன்களில் ஜெயந்த் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு நியூசிலாந்தின் விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தபடியே இருந்தன. பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. சுழற் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தனது மாயாஜால பந்து வீச்சால் நியூசிலாந்தை சுருட்டி வீசினார்.

வெறும் 23.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 79 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் சரணடைந்தது. 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, தொடரையும் வென்று அசத்தியது இந்தியா. ஆறே ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டனுடன், 18 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சுருட்டிய அமித் மிஸ்ரா, ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. அஸ்வின் ஓய்வில் இருந்த நேரத்தில் அணிக்குள் வந்து அஸ்வினை போலவே இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் அமித் மிஸ்ரா என்பது சிறப்பு.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/Q5xNrYT6M7c/5th-odi-new-zealand-bowled-for-79-india-clinch-series-265967.html

Related Posts:

«