கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல! நீதிமன்றில் கடற்படை அதிகாரி தெரிவிப்பு

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் அலுத்கெதர உபுல் பண்டார நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

17 ஆண்டுகளாக புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டு, இந்த இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதனை உறுதியாக கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞர்கள் நன்றாக சிங்கள மொழி பேசக்கூயவர்கள் எனவும், கொழும்பை அண்டிய பகுதிகளை முகவரிகளாகக் கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞர்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடுமென கடற்படை புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தல் விடுத்த காரணத்தினால் இந்த தமிழ் இளைஞர்களை கைது செய்தேன்.

கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக்கொண்ட ராஜீவ் நாகநாதன், ஆர்.விஸ்வநாதன் மற்றும் திலகேஸ்வரன் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு தெஹிவளை பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் சாட்சிமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டதாகவும் 1999ம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006 முதல் 2009ம் ஆண்டு வரையில் கடற்படை தளபதியாக கடயைமாற்றிய வசந்த கரன்னாகொடவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராஜீவ் நாகநாதனை தாம் அடையாளம் கண்டு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட இடம் பற்றிய விபரங்களை தாம் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் உண்மையில் இவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்பது தமது அனுபவத்தின் ஊடாக கண்டு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சாட்சியாளரிடம் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி குறுக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

Related Posts:

«