காவிரி பிரச்சினை பற்றி பேசுபவர்கள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் – கருணாநிதி

சென்னை: காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச திமுகவிற்கு உரிமை இல்லை என்று எள்ளி நகையாடும் சிலர், காவிரிப் பிரச்சினையில் தாங்கள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் என்பதை தங்களுடைய மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு நாட்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, மறுப்பேதுமின்றி அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்கள், அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியதற்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை மனதிலே கொண்டு, மத்திய அரசு வழங்கிய அறிவுரைகளின்படி திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்து, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு வாதத்தை வைத்தார்.

 karunanidhi Allegation on bjp, admk

அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் தமிழகத்தின் நலன்களுக்குத் துரோகம் இழைத்திடும் இத்தகைய முடிவை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டதால்; பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதைப் போல, பா.ஜ.க. அரசின் உண்மைச் சொரூபம் வெளி உலகத்திற்கும் தெரிந்து, அதன் முகத்திரை கிழிந்து தொங்கிய நிலையில்; தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

அதற்கு ஏற்கத்தக்க எவ்வித பதிலும் சொல்ல முடியாத பா.ஜ.க.வினரில் ஒரு சிலர் காவிரிப் பிரச்சினையிலே திமுக துரோகம் செய்து விட்டது என்றும், உச்சநீதி மன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கினைத் தி.மு.கழகம் தன்னிச்சையாக திரும்பப் பெற்றதால், குடி முழுகி விட்டது என்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெறுப்பையும் விரோதத்தையும் கக்கி வருகிறார்கள். அவர்களின் உண்மைக்குப் புறம்பான அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும், நடந்தது என்ன என்பதைப் புரியாதவர்களுக்கும், புரிந்தும் புரியாததைப் போல நடிப்பவர்களுக்கும் அழுத்தந்திருத்தமாகப் புரிய வைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையின் அடிப்படையில் பின்வரும் விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

நான் பிறந்த வருடமான 1924க்கும் காவிரிப் பிரச்சினைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூர் ராஜ்யமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஐம்பது ஆண்டுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரி நீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது பற்றிக் கலந்துபேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்சினை ஏற்படின் மத்திய அரசை நாடியோ, நடுவர் தீர்ப்பை நாடியோ, உரிய முடிவெடுக்கக் கூடிய வழிவகை காண்பது பற்றித் தீர்மானித்திட 1974-ஆம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமாகும்.

இடைப்பட்ட ஐம்பதாண்டு காலத்தின் பெரும் பகுதி பிரச்சினைகள் எதுவும் அதிகமின்றி நிலைமை இருந்ததற்கு மாறாக; 1974-க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமே 1974-ஆம் ஆண்டு முடிந்து விடுகிற ஒப்பந்தமென்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968-ஆம் ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன்; மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது. மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி 19-8-1968 அன்றும் 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரித் தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதி களின் கூட்டம் நடைபெற் றது. அந்தப் பேச்சுவார்த் தையை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு. கே.எல். ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார்.

கர்நாடக முதலமைச்சர் திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் பொதுப்பணித் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் கலந்துகொண்டார். நான், தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று கலந்துகொண்டேன். முக்கியமாக 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது; முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர் 1969-ல் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9-ஆம் நாள், மீண்டும் கே.எல். ராவ் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.

திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; எனினும் அவை பலனளிக்கவில்லை. எனவே 1971 ஜூலை 8-ஆம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிற்கு ஆணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்கு பிரச்சினையை விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.

21-5-1972 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம் என்று கூறினார்கள். அப்போது இந்திரா காந்தி அம்மையார், “இந்தப் பிரச்சினையில் நான் பேசுவதென்றால், இடையில் நீங்கள் ஒரு வழக்குப் போட்டிருக்கிறீர்களே, இந்த வழக்கு இருக்கும்போது பேச முன் வருவார்களா? எனவே என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள்” என்று கேட்டார்கள். அப்போதுகூட நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டிக் கலந்து பேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து – அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலேகூட மீண்டும் வழக்குப் போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப் பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறக் காரணம் இதுதான். ஜனநாயக அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் முன்பு அ.தி.மு.க.வினரும், தற்போது பா.ஜ.க. வினரும் காவிரிப் பிரச்சினையில் தி.மு.கழகமும், நானும் துரோகம் செய்து விட்டதாகத் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே அடிப்படைப் பிரச்சினையைத் திசை திருப்பக்கூடிய வகையில் குறை கூறுகிறார்கள்.

அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் மத்திய பாசன அமைச்சர்கள் கே.எல். ராவ் முன்னிலையிலும், 27-6-74 அன்று கே.சி. பந்த் முன்னிலையிலும், 29-11-1974 மற்றும் 15-2-75 ஆகிய நாட்களில் பாபு ஜெகஜீவன்ராம் முன்னிலையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தம் தமிழகத்தின் பாசனத்தைப் பாதுகாக்கும் அளவுக்கு மேட்டூரில் தேவைப்படும் நீர் கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்காததால் இரவு முழுதும் விடிய விடியப் பேசியும், அது ஏற்கப்படவில்லை.

பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சிகளைக் கலந்தாலோசித்து தமிழக அரசு மத்திய அரசினை நடுவர் மன்றம் அமைக்குமாறு கோரி 1975 மே திங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. 25-8-1976 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியில் மத்திய அரசால் மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப் பட்டது. 1977-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். தலைமையில் இருந்த அ.தி.மு.க அரசும் அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து 5-8-78, 3-9-78, 9-10-78, 18-9-80, 27-12-80, 13-8-81 ஆகிய நாட்களில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையிலும், 14-10-81 மற்றும் 15-10-81 ஆகிய நாட்களில் தமிழக, கர்நாடக மாநில அரசுகளின் இடையேயும் 5-4-83 அன்று மத்திய அமைச்சர் ராம் நிவாஸ் மிர்தா அவர்கள் முன்னிலையில் இரண்டு மாநில முதலமைச்சர்களும், 5-1-84 அன்று பெங்களூரில் இரண்டு மாநில முதல் அமைச்சர் களும், 5-11-1985 அன்று அதிகாரிகள் மட்டத்திலும், பேச்சுவார்த்தை நடைபெற்றது.

23-11-85 அன்று சென்னையில் தமிழக, கர்நாடக மாநில முதல் அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியபோதும் பயன் எதுவும் ஏற்படாததால், வேறு வழியின்றி, கழக ஆட்சியின் போது முடிவெடுத்ததைப் போலவே, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 16-6-1986 அன்று மத்திய அமைச்சர் பி. சங்கரானந்த் முன்னிலையில் மாநில முதல் அமைச்சர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 6-7-1986 அன்று நடுவர் மன்றம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற மத்திய அரசின் விருப்பத்திற்கு தமிழக அரசு இணங்கவில்லை.

தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதையொட்டி 19-9-1988 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் பலனளிக்காததால், நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிற்கு ஆணை வழங்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் 25-9-1988 அன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 18-10-1988 அன்று பிரதமருக்கும் கடிதமும் எழுதப்பட்டது.

நடுவர் மன்றம் அமைந்த பிறகு, இந்தப் பிரச்சினையை முழுவதும் விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு நீண்ட நாளாகும் என்பதால் ஒரு இடைக்காலத் தீர்ப்பு வழங்குங்கள் என்று கழக அரசின் சார்பில் 28-7-1990 அன்று வேண்டுகோள் விடுத்தோம். 5-1-1991 அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றது. நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பு அளியுங்கள் என்று உச்ச நீதிமன்றத்திடம் 10-1-1991 அன்று கழக ஆட்சியிலே ஒரு வழக்கு தொடர்ந்து “அதிகாரம் உண்டு” என்று 26-4-1991 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே இடைக் காலத் தீர்ப்பைப் பெறவும் கழக அரசுதான் நடவடிக்கை மேற்கொண்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. 1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9-7-1997, 23-7-1997, 29-9-1997, 1-11-1997, 6-11-1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்கள் மூலமாகவும், 27-7-1997 மற்றும் 29-9-1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்தும் கேட்டுக் கொண்டேன்.

மேலும் 10-11-1997 அன்று மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 28-3-1998, 6-4-1998 மற்றும் 31-5-1998 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் மூலமாகவும், 7-4-1998 அன்று நேரிலும் சந்தித்து, வரைவுத் திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொண்டேன்.

21-7-1998 அன்று உச்ச நீதிமன்றம், “பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து, 15 மாதமாகிறது. இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது. 28-7-1998 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள், 6-8-1998 அன்று பிரதமர் அலுவலகத்தில் காவிரி பிரச்சினை பற்றி பேசுவதற்காக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுதியிருந்தார். அதிலே கலந்து கொள்வது பற்றி 3-8-1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் கூட்டியிருக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாய் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லக்கூடாது என்று அறிக்கை விடுத்தார்.

பிரதமர் வாஜ்பாய் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்தக் கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998இல் தி.மு.கழக ஆட்சியில் இடைக் காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று.

“காவிரி பிரச்சினையில் வாஜ்பாய், கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு.கழக ஆட்சியிலேதான் 5-2-2007 அன்று வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இறுதித் தீர்ப்பை “ஏற்க முடியாத தீர்ப்பு” என்றும், “கருணாநிதியால் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் எப்போதும் போல எனது ராஜினாமாவை வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த போது கூட, தி.மு.க அரசு அந்த நிலையிலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19-2-2007 அன்றும் 15-4-2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுத்தது.

எனவே ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் ஏற்கவில்லை, இறுதித் தீர்ப்பையும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. காவிரி நதி நீர் ஆணையத்தையாவது ஏற்றுக் கொண்டாரா? காவிரி நதி நீர் பிரச்சினை குறித்த பழைய விவரங்களை ஓரளவு சுருக்கி எழுதியிருக்கிறேன். தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் நல்ல வாய்ப்பினைப் பாழடித்து, எதிர்மறையான நிலைப்பாட்டை மேற்கொண்டு பிரச்சினையைத் திசை திருப்பவும், மேலும் தாமதப்படுத்திடவும் காரணமான பா.ஜ.க. வினர் “வாய்மையே வெல்லும்” என்பதை உணர்ந்து இனியாவது தங்களுடைய வழியைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச தி.மு.கவிற்கு உரிமை இல்லை என்று எள்ளி நகையாடும் சிலர், காவிரிப் பிரச்சினையில் தாங்கள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் என்பதை தங்களுடைய மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை வரலாறுகளை சிலர் திரித்துப் பேசியதன் விளைவாகத்தான் இந்தக் கடிதம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/DWT-A4_Pqiw/karunanidhi-allegation-on-bjp-admk-265788.html

Related Posts:

«