சட்டம் ஒரு இருட்டறை – திரைவிமர்சனம்


Sattam Oru iruttarai

நடிகர் : தமன்குமார்
நடிகை : பியா, பிந்துமாதவி, ரீமாசென்
இயக்குனர் : சினேஹா பிரிட்டோ
இசை : விஜய் ஆண்டனி
ஓளிப்பதிவு : சி.ஜே.ராஜ்குமார்

முப்பது வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’யின் ரீமேக்கே இது. இன்னொரு களத்தில் புதுப்பொலிவு காட்டுகிறது. காதலியை கொன்றவர்களை பழிதீர்க்கும் இளைஞன் கதை…

நேர்மையான போலீஸ் அதிகாரி ரீமாசென். அவரது தம்பி தமன் குமார். கல்லூரியில் படிக்கிறார். ஜெயிலில் இருந்து விடுதலையாகும் சுரேஷ் பணத்துக்காக கொடூர கொலைகளை செய்கிறார். அவரை தமன்குமார் தந்திரமாக சாகடிக்கிறார். போலீஸ் பிடியில் இருந்து தப்பும் இன்னொரு ரவுடியையும் கொல்கிறார்.

கொலைகாரன் தனது தம்பி என அறிந்து ரீமாசென் அதிர்கிறார். தடயங்கள் இல்லாததால் கைது செய்ய முடியவில்லை. கையும் களவுமாய் பிடித்து சட்டத்தின் முன் தம்பியை நிறுத்த வலைவிரிக்கிறார்.

இதற்கிடையில் தமன்குமார் பழி வெறியோடு அலைவது ஏன் என்ற உருக்கமான பிளாஷ்பேக்…. இறுதியில் வெளிநாட்டில் பதுங்கிய பெரிய தாதாவை வரவழைத்து தீர்த்துக்கட்ட தமன்குமார் காய் நகர்த்துகிறார். இன்னொருபுறம் அவரை கைது செய்ய போலீஸ் நெருங்குகிறது.

போலீசில் மாட்டாமல் காரியத்தை முடித்தாரா? என்பது கிளைமாக்ஸ்…

காதல், ஆக்ஷனின் இருமுகம் காட்டுகிறார் தமன்குமார், கல்லூரி விழாவில் இருப்பது போன்று போலீசை ஏமாற்றி சுரேஷை ரோட்டில் ஓடவிட்டு சாகடிப்பதும், தியேட்டரில் படம் பார்ப்பதுபோல் ‘செட்டப்‘ செய்து இன்னொரு ரவுடியை போலீஸ் வேனில் இருந்து கடத்திபோய் மாஞ்சா கயிற்றால் கழுத்தை நெரித்து கொல்வதும் விறுவிறுக்கின்றன.

தமன் காதலியாக வந்து வில்லன் கோஷ்டியின் கொலையை படம் எடுக்கும்போது பரிதாபமாக சாகடிக்கப்படுகிறார் பியா. வெளிநாட்டில் தமன்குமாருக்கும், பியாவுக்குமான சச்சரவு சந்திப்புகளும், மோதலும், பின்பு கூடலும் சுவாரஸ்யமானவை. அரை டவுசர் கவர்ச்சியிலும் மனதை அள்ளுகிறார்.

தமனின் இன்னொரு காதலியாக வரும் பிந்து மாதவி அழகாய் பளிச்சிடுகிறார். எதிரியை அழித்து சாகத்துணியும் தமனிடம் விழிகளில் நீர்பொங்க கதறும் கிளைமாக்ஸ் சீனில் அழுத்தமாய் பதிகிறார்.

போலீஸ் அதிகாரியாக ரீமாசென் நேர்த்தி. தம்பியை கைது செய்வதில் காட்டும் ஆவேசம் பாசத்தில் இல்லை. குரூர தாதாக்களை மாணவன் தன்னந்தனியாய் கொன்று அழிப்பதற்கு ஏற்ப திரைககதையில் இன்னும் வலு ஏற்றி இருக்கலாம்.

காதல், ஆக்ஷன் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி புதுமுக இயக்குனர் சினேஹா பிரிட்டோ கவனம் ஈர்க்கிறார். சட்டத்தின் ஓட்டைகள் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் வசனங்கள் சாட்டையடி. ராதாரவி, சுரேஷ், ராம் வில்லத்தனத்தில் கொடூரம். சி.ஜே.ராஜ்குமார் கேமரா ஹாங்காங் அழகை அள்ளுகிறது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கின்றன.
Related Posts:

«