செம்மரம் கடத்த வந்தவர்களென மேலும் 106 தமிழர்களை கைது செய்தது ஆந்திரக் காவல்துறை

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று நேற்றும் 106 தமிழ் கூலித் தொழிலாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.


கடந்த வாரம் புதன் கிழமை அன்று செம்மரம் கடத்தியவர்கள் என்று ஆந்திர காவல்துறை 20 பேரை சுட்டுக் கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 106 தமிழர்களை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த வாரம் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தப்பித்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களைக் கைது செய்துள்ள நெல்லூர் போலீசார், இன்று நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்ப்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்தவர்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், லாரி, மினி லாரி உள்ளிட்ட 4 வாகனங்கள், கைத்தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ஆந்திர காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எனினும், உண்மையான கடத்தல் கும்பலை பிடிக்க முடியாத அந்திர காவல்தூறையினர் அப்பாவி மரம் வெட்டும் தொழிலாளர்களைத் தான் குறிவைத்து தாக்கிவருவதாக தமிழக தரப்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை கல் உடைக்கும் தொழில் எனக் கூறி ஏமாற்றி வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று மரம் வெட்டுதலில் ஆந்திர புரோக்கர்கள் ஈடுபடுத்திவருகின்றனர் எனவும், தாங்கள் வெட்டுவது செம்மரக் கட்டை என்பது கூட அத்தொழிலாளர்களுக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆந்திரா சென்ற போது மாயமாகியுள்ளனர்.

 

Related Posts:

«