சொந்தக் காணிகளைக் கோரியே வடக்கு மக்கள் போராடுகின்றனர்; மூன்று மாதத்துக்குள் தீர்வு: மைத்திரிபால சிறிசேன

வடக்கில் இருக்கின்ற அகதி முகாம்களும் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியஸ்தர்களை நேற்று  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தங்களது சொந்த காணிகளை தரவேண்டும் என்று கோரியே வடக்கில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்துகிறார்கள் இந்தப் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்தினுள் தீர்வுகாண முடியும். படையினரிடம் இருந்த காணிகளையும் கட்டம் கட்டமாக நாம் வழங்கி வருகிறோம். காணிகளை அடையாளம் காண்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நில அளவையாளர்கள் செல்வதில் பிரச்சினை இருக்கிறது.

சில இடங்களில் நில அளவையாளர்கள் செல்லும் போது இராணுவ முகாம் அமைக்க அளவிடுவதாககூறி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். உண்மையில் அந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளைத்தான் கேட்கிறார்கள். படையினரின் காணிகளைக் கேட்கவில்லை. அவர்களின் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் அர்த்தம் இருக்கிறது. நியாயமானதும் கூட. என்றாலும் மூன்று மாத காலத்தினுள் இதற்கு தீர்வு காணப்படும். வவுனியா பிரதேசத்தில் படை வசம் இருந்த கலாசார மத்திய நிலையம், கூட்டுறவுச் சங்க கட்டடம் எல்லாம் வழங்கப்பட்டுவிட்டது.” என்றுள்ளார்.

 

Related Posts:

«