தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை: கி.வீரமணி வேதனை

சென்னை: மொழிவாரி மாநிலம் அமைந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழகத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தியா என்பது ஒரு நாடல்ல. பல மாநிலங்களைக் கொண்ட துணைக் கண்டம். அந்தந்த மாநிலத்தில் வாழும் மக்கள் அவர்கள் சார்ந்த இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என எண்ணுவது இயல்பு.

 veeramani urged to people from Tamil Nadu give more importance to tamil language

இந்தியா ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது மொழி உணர்வு, இன உணர்வு பிரச்சினைகள் வரும் எனக்கூறி தடுத்துப் பார்த்தார்கள். தென் மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைக்கலாம் என யோசனை சொன்னார்கள். பெரியார் போன்றவர்களின் எதிர்ப்பால் அது முறியடிக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்படவில்லை. 1967-ல் அண்ணா முதல்வரான பிறகே பெயர் மாற்றப்பட்டது. இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனாரை இந்த தருணத்தில் நினைவு கூர்வோம். ஓர் இனம் என்றால் மொழியால், வழியால், விழியால் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

ஆனால், இன்றும்கூட தமிழகக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் இல்லை. கோயில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாது. தமிழக உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லை. அகில இந்திய தேர்வுகளை தமிழில் எழுத முடியாது. இந்திய ஆட்சி மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது. நவம்பர் முதல் தேதியைக் கொண்டாடுவோம். அதே நேரத்தில் அந்த நாளுக்கான அர்த்தம் முழுமை பெற்றுள்ளதா என்பதையும் சிந்திப்போம்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/6uURo2HVVzU/veeramani-urged-people-from-tamil-nadu-give-more-importance-266170.html

Related Posts:

  • No Related Posts

«