தமிழக மீனவர் பிரச்சனை.. அடுத்த கட்டம் என்ன… நவ.5-ல் தெரியும்.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

டெல்லி: இந்திய இலங்கை மீனவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக பேசி முடிவெடுக்கும் வகையில் இன்று டெல்லியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் 5ம் தேதி நடைபெறும் இரு நாட்டு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன் வைக்கப்படும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TN fishermen next meet on Nov. 5

தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் உள்ள ஜவகர் பவனில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 அமைப்புகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளும், புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இருந்து 4 மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில், யாழ்ப்பாணம், மன்னார், முள்ளிவாய்க்கால், வன்னி பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கச்சத்தீவு பிரச்னை, இலங்கையில் பல மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை மீட்பது, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செய்வது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், சர்வதேச கடல் பகுதி அருகே மீன்பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டம் முடிவடைந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை, வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இரு நாட்டு வெளியுறவு மீன் வளத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட உள்ளன என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/psufszRvbg4/tn-fishermen-next-meet-on-nov-5-266232.html

Related Posts:

  • No Related Posts

«