தமிழ் பேசுகின்ற மக்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள் – கிருஸ்ணப்பிள்ளை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 108 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் இடமாற்றம் பெற்று வந்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் இன்று (16) பொதுச்சந்தைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு உரையாற்றுகையில்,

கிழக்கு மகாணத்திலே தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக வாழுகின்ற மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்கின்ற வேளையில் நல்லாட்சியினைக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு இதனை விட இந்த அரசாங்கம் தீய ஆட்சி என்பதற்கு என்ன இருக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

நாங்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள். சிறுபான்மை மக்களே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தி, ஆட்சி மாற்றத்தினை கொண்டு வந்தவர்கள்.

ஆனால் இன்று நல்லாட்சி என்ற பெயரிலே பொல்லாத ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மாகாண உள்ளூராட்சி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிலும், பிரதேச சபையின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழும் கட்டப்படவுள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமடினால் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளர் இ.பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன் மா.நடராஜா மற்றும் மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரதேச செயலாளர் மூ.கோபால ரட்ணம் களுவாஞ்சிகுடி நகரத்தலைவர் அ.கந்தவேள், பிரதேச சபைச் செயலாளர் குபேரன் மற்றும் வர்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசன் குருக்களினால் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

அத்தோடு முதலமைச்சர் பொதுச் சந்தையினைப் பார்வையிட்டு வர்த்தகர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பொருட்களையும் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«