தமிழ் பேசும் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்!

யாருக்கு வாக்களிப்பது என்ற உங்களது தீர்மானத்தில் நாம் எந்தவொரு செல்வாக்கையோ, அல்லது தலையீட்டினையோ செய்யப் போவதில்லை. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

இம்முறை தேர்தலில் கட்சிக்கு அப்பால் கொள்கை நிலை கொண்ட நேர்மையான பற்றுறுதி கொண்ட விலை போகாத தூர நோக்குப் பார்வை கொண்ட கரிசனையுடைய பிரதிநிதிகளை நீங்கள் அடையாளம் காணவேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வேட்பாளர்களும் மக்கள் நலனே முதன்மையானது என்ற இலக்கினால் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதி செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தான் ஆதரவளிக்கப் போவதில்லையென்றும் நடுநிலை வகிக்கப் போவதாகவும் தெரிவித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இத்தகைய முடிவானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக்கு மாறானதாக இருந்தது. இருந்த போதிலும் இந்த முடிவு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது எதுவித விமர்சனங்களையும் செய்யவில்லை. முதலமைச்சரின் முடிவு தொடர்பில் அதிருப்தி நிலவினாலும் அதனை கூட்டமைப்பின் தலைமை வெளிக்காட்டவில்லை.

2013ம் ஆண்டு வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரும்பாடுபட்டிருந்தார்.

முதலில் முதலமைச்சர் வேட்பாளராக வருவதற்கு சி.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்திருந்தார். பின்னர் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கடும் வாதப் பிரதிவாதங்களின் பின்னரே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் தலைவர்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். விக்னேஸ்வரன் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வடமாகாணசபையின் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மாகாணசபையின் அமைச்சரவையின் நியமனம் தொடர்பிலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே முறுகல் நிலை எழுந்திருந்தது. இந்த வேளையில் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சிக்கு சார்பாக முதலமைச்சர் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும ஏனைய கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் சார்பில் செயற்படுவதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்தக் குற்றச்சாட்டில் உண்மையும் இருக்கவே செய்தது.

இவ்வாறு செயற்பட்டு வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் நடுநிலை வகிக்கப் போவதாகவும் முதலமைச்சர் அறிவித்தமை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து கேட்டபோது தேர்தல் முடியும் வரை தான் ஊமையாக இருக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு அறிவித்து 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் தேர்தல் தொடர்பில் இரண்டாவது அறிக்கையையும் விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையில் தனது மன ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ள போதிலும், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை எடுத்தியம்பியிருக்கின்றார்.

ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும் கூட ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்கைக்காக தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொண்டும், வசை பாடிக்கொண்டும் அரசியல் நாகரிகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமையினை காணும் போது பக்கச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற எனது முடிவானது சரியானது என்றே நான் கருதுகிறேன் என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமையானது கட்சிகளுக்கிடையே விருப்பு வாக்குக்காக வேட்பாளர்கள் முரண்படுவதை அவர் எதிர்க்கின்றமை தெரிகின்றது.

தேர்தலின் போது உங்களது கடமையை செய்யாது போனால் அது உங்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கேடு தருவதாய் அமைந்து விடும் என நான் அஞ்சுகின்றேன். தேர்தலில் வாக்களிப்பது என்ற உங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வருவதோடு தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டவேண்டும். என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடமாகாண முதலமைச்சர் கதிரையை அலங்கரிக்கும் நீதியரசர் விக்னேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலைமை வகித்தமை தொடர்பில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். அதனை அவர்கள் பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இத்தகைய முடிவை எடுப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது. அதில் நியாயமான காரணங்கள் இருக்குமானால் அவரது இந்த நிலைப்பாட்டையும் தவறு என்று கூற முடியாத சூழல் ஏற்படும்.

எது எப்படி இருப்பினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிக்கவேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு முன்வரவேண்டும்.

எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பதையும் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பதையும் தமிழ் பேசும் மக்கள் இப்போது தீர்மானித்துவிடவேண்டும்.

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன. கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டதுடன் தமது நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டியுள்ளன.

எனவே, தற்போதைய நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பதை சிறுபான்மையின மக்கள் தீர்மானிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. நீதி நியாயமான தேர்தல் நடைபெற்று மக்கள் விரும்பியவாறு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வகையிலான தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் என்று நம்பக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தற்போதைய நிலையில் தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை சிதறவிடாது தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் யார் அரசாங்கம் அமைத்தாலும் அதில் பேரம் பேசும் சக்தியாக திகழமுடியும். இதற்கு ஏற்றவகையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியது போன்று அணிதிரண்டு தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Related Posts:

«