தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலே நல்லிணக்கம் உருவாகும்; ஐ.நா. தூதுவரிடம் எடுத்துரைப்பு!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல், மீள்குடியேற்றம், காணாமற்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான  அறிக்கையாளர் ரீட்டா ஐஷாக் நாடியா, நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடக்கு மாகாண அமைச்சர்களை சந்தித்தார். இதன்போதே, வடக்கு மாகாண அமைச்சர்கள் குழு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

பத்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி கொழும்பு வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் நேற்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினருடான சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

இதன் ஒருகட்டமாகவே வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவினையும் அவர் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

சுமார் 45 நிமிட நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளில் அறிக்கையாளர் விரிவாக கேட்டறிந்து கொண்டதாக அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

 

Related Posts:

«