திருமணம் கைகூடும் திருபந்தணைநல்லூர்

 

காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில், 35-வது தலமாக திருபந்தணைநல்லூர் விளங்குகிறது. இறைவன் சிவபெருமான், உமாதேவியை இத்தலத்தில் திருமணம் செய்துகொண்டதால், இத்தலம் ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

 

 

இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என 2 பதிகங்கள் இருக்கின்றன.

எப்படிப் போவது?

மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து, பந்தநல்லூர் வழியாகச் செல்கிறது. ஊரைத்தாண்டிச் சாலையோரத்தில் சற்று உள்ளடங்கியதாக கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் குத்தாலத்தில் இருந்தும் பந்தநல்லூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

 

இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு


 

இந்த ஆலயத்தின் ராஜகோபுரம், ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரியதீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால், விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

மண்டபத்தில், தெற்கு நோக்கிய அம்பாள் வேணுபுஜாம்பிகை சந்நிதி உள்ளது. அருகில் காளி சந்நிதியும் உள்ளது. அடுத்துள்ள நுழைவாயில், திருநாவுக்கரசர் நுழைவாயில் என்ற பெயருடன் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் வலதுபுறம் வள்ளி-தெய்வானை சமேத முருகர் சந்நிதி உள்ளது. இந்த வாயில் வழி உள்ளே சென்று இடதுபுறம் திரும்பினால், நால்வர் சந்நிதியைக் காணலாம்.

 

உட்பிராகாரம் வலம் வரும்போது, கன்னி மூலையில் நிருதி கணபதி சந்நிதி, அதையடுத்து கிழக்கு நோக்கியுள்ள வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியைக் காணலாம். அதையடுத்து கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. 63 நாயன்மார்களின் அணிவகுப்பு, தசலிங்கங்கள் ஆகியவையும் உட்பிராகாரத்தில் காணப்படுகின்றன.

பைரவரை அடுத்து, நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன. இவற்றுக்கு அருகில் சந்திரன், சூரியன், விநாயகர் உள்ளனர். தனிக்கோயிலாக, பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார்.

திருஞான சம்பந்தர் திருவாயில் என்று பெயர் எழுதப்பட்டுள்ள சுவாமி சந்நிதி வாயிலுக்கு வெளியிலுள்ள துவாரபாலகரைக் கைகூப்பித் தொழுது உட்சென்றால், இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்புலிங்க உருவில், குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றாதலின், குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்கின்றனர். அர்த்தமண்டபத்தில், உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள், பிட்சாடனமூர்த்தி மிகவும் அழகுடன் உள்ளது.

இத்தலத்தில், வருடத்தில் ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில், இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன.

தல வரலாறு


 

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது, பார்வதிக்குப் பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால், சிவன் 4 வேதங்களையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால், சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போக, மாலை வேளையில் சூரியன் மறையும் நேரம் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்துக்கு நான் ஆளாகமாட்டேன் என கூறிவிடுகிறார்.

முனிவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன், பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்காமல், பந்து விளையாட்டிலேயே ஆர்வத்துடன் இருந்தாள். கோபம் கொண்ட சிவன், பந்தை தன் காலால் எட்டி உதைத்துவிட்டு, பார்வதியை பசுவாகச் சபிக்கிறார். வருந்திய பார்வதி, சாபவிமோசனம் வேண்டுகிறார். பந்து, பூமியில் இத்தலத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்துக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.

பார்வதியைக் காப்பாற்ற, மகாவிஷ்ணு இடையர் வடிவில் ஒரு பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேயவிட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார்.

 

ஒருநாள், பசு புற்றில் இருந்த லிங்கத்தைப் பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்துவிடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய, பசுவின் பின்னால் கன்வ மகரிஷி செல்கிறார். புற்றின் மீது பசு பால் சொரிவதைக் கண்டவுடன், பசுவை அடிக்கிறார். பசு துள்ளிக் குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெறுகின்றனர்.

சாப நிவர்த்தி பெற்றவுடன், தன்னை திருமணம் செய்ய சிவனிடம் பார்வதி வேண்டுகிறார். அதற்கு சிவன், வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து, சிவனை அம்பாள் திருமணம் செய்துகொள்கிறாள்.

சிவன், மூலஸ்தானத்தில் கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும், இத்தலம் வந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், திருமணம் கைகூடி வரும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாகும்.

 

இங்கு சிவன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பந்து அணைந்த தலம் ஆதலால், பந்தணை நல்லூர் என்று இத்தலம் பெயர் பெற்றது. பசு உருவில் இருந்த அம்பிகைக்குப் பதியாக வந்து அருள் செய்தமையால், இறைவன் பசுபதிநாதர் என்று பெயர் பெற்றார். சிவலிங்க பாணத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.

 

இத் தலத்துக்கான பதிகத்தைப் பாடியவர் – மயிலாடுதுறை சிவக்குமார்

 

courtesy : www.shivatemples.com

அடுத்த வாரம் சந்திப்போம்.

Source http://www.dinamani.com/religion/parikara-thalangal/2016/01/15/திருமணம்-கைகூடும்-திருபந்த/article3222621.ece

Related Posts:

«