நடிகர் பாலகிருஷ்ணாவிடம் சுங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரின் மனைவி வசுந்தராதேவி உள்பட குடும்பத்தினர் 6 பேர் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு விமானம் மூலமாக ரேணிகுண்டாவில் வந்து இறங்கினர்.

நடிகர் பாலகிருஷ்ணா கொண்டு வந்த உடை மற்றும் உடைமைகளை ரேணிகுண்டா விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனைச் செய்தனர்.

அப்போது அவர்களிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சம் இருந்தது தெரிய வந்தது. ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரி சீனிவாசரெட்டி பறிமுதல் செய்தார். எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினார்.

அதற்கு அவர், நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன், உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சத்தை கொண்டு வந்தேன் என்று பதில் அளித்தார்.

பணத்துக்குரிய ஆவணங்கள் இருந்தால், அதனை காண்பித்து விட்டு பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் பாலகிருஷ்ணா உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு ரூ.10 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நடிகர் பாலகிருஷ்ணா, மனைவி வசுந்தராதேவி மற்றும் குடும்பத்தினர் ரேணிகுண்டாவில் இருந்து காரில் புறப்பட்டு திருமலைக்கு வந்தனர். திருமலையில் அவர்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் புஷ்கரணியில் நடந்த பஞ்சமி தீர்த்த உற்சவத்திலும் அவர்கள் பங்கேற்றுப் புனித நீராடினர்.

Related Posts:

  • No Related Posts

«