நீதானே என் பொன் வசந்தம் விமர்சனம்

மின்னலே, வி.தா.வா போன்ற முந்தைய ஹிட்டுகளால் கவுதம் மேனனின் காதல் படங்கள் என்றாலே கள் குடித்த நரியாகி திரிவார்கள் இளசுகள்.


அவர்கள் அத்தனை பேரையும் ஊளையிட வைத்திருக்கிறது நீ.எ.பொ.வ திரைப்படம். கதை யாரோ ரேஷ்மா கட்டாலா என்ற பெண்மணி. திரைக் கதையிலும் அவர் தலையீடு. இந்த லட்சணத்தில் கவுதம் எங்கே சுதந்திரமாக காதல் பண்ணுவது? அப்படியிருந்தும் மேனனின் டச்சுகள் ஆங்காங்கே இருப்பதால் இந்த பொன் வசந்தம் முழுக்க முழுக்க புண் வசந்தமாக மாறவில்லை என்பதுதான் சற்றே ஆறுதல்.

கல்லு£ரியில் சமந்தாவை பார்க்கும் ஜீவா, பள்ளி காலத்தில் அவரோடு பழகியதை நினைவு கொள்கிறார். மீண்டும் பிக்கப் பண்ணும் எண்ணத்தோடு அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ படத்திலிருந்து நீதானே என் பொன் வசந்தம்… என்ற பாடலை பாட நித்யாவான சமந்தா, வருண் என்கிற ஜீவாவின் பாடலை ரசிக்கிறார். முக்கியமான சினிமா பாடல்களையெல்லாம் கூச்ச நாச்சமில்லாமல் சொந்த காதல்களுக்கு டெடிகேட் பண்ணி வரும் இந்த கால இளசுகளுக்கு நேர்கிற மாதிரியே எல்லாமும் நடக்கிறது இவர்கள் காதலிலும். சேர்தல், பிரிதல், சண்டை போடுதல், சமாதானமாகுதல் என்று அத்தனை கோணத்திலும் பயணிக்கும் கதையில் இறுதிகட்டம் என்ன?

ஜீவாவுக்கு கல்யாணம். மணப்பெண் வேறு யாரோ. ஒரு பத்து நிமிஷம் அவன் சொன்னதை காதுல கேட்டிருக்கலாம். அல்லது அவனோட மனம் விட்டு பேசியிருக்கலாம். என்னை விட்டுட்டு போயிட்டானே என்று கதறும் சமந்தா, மனசை கல்லாக்கிக் கொண்டு ஜீவாவின் ரிசப்ஷனுக்கு வர, அங்கே நடக்கிறது ஒரு திருப்பம். தொலைந்து போன காதல் ரோசா மீண்டும் மலர்கிறது ஜீவா மனசில். நம்பி வந்தவளை நட்டாற்றில் விட்டுவிட்டு மீண்டும் சமந்தாவோடு சேர்கிறார்.

வழக்கமாக அமெரிக்க மாப்பிள்ளைகள்தான் அநாதையாக்கப்படுவார்கள் தமிழ்சினிமாவில்! இதில் அழகான பெண் ஒருத்தி. ஒருவேளை கவுதமின் அடுத்தப்பட ஹீரோயின் இவரோ, என்னவோ?

இந்த படம் வந்த பின்பு சமந்தாவுக்கு சரும நோய் வந்திருந்தால், கோவிலில் படையல் போட்டோ, அங்கபிரதட்சணம் செய்தோ அவருக்காக கோவில் கோவிலாக உருண்டிருப்பார்கள் ரசிகர்கள். அவரே அழகு, அவரே திமிர். அவரே பெண்மையின் பெயரெச்சம்… அவரே பெண்மையின் உயிரெச்சம் என்று எல்லாமுமாகி கவர்கிறார். அதுவும் ஜீவா பாடுகிற போது இவர் ஒரு பர்பாமென்ஸ் கொடுக்கிறாரே… அதற்காகவே ஆயிரம் ரசிகர் மன்றங்களை ராவோடு ராவாக திறக்கலாம்.

இப்படத்தில் மீசையில்லாத ஒரு கிளி மூக்கு ஜீவா. ‘ஏய்… கடைசி பெஞ்ச்ல ஒரு ஹேண்ட்சம் ஹீரோ உட்கார்ந்திருக்கான் பாரு’ என்று மாணவிகள் அடையாளம் காட்டும்போது பொசுக்கென்று சிரிப்பு வருகிறது நமக்கு. எம்பிஏ முடிந்த பின்பாவது அவருக்கு ஒரு மீசை வைத்திருக்கலாம். என்ன சிரமமோ?

சமந்தாவை பிரிய ஜீவா சொல்லும் காரணம் அவ்வளவு ரகசியத்திற்குட்பட்டதல்ல. அதை சமந்தாவிடமே சொல்லிவிட்டு படிக்க போயிருக்கலாம். அவர் சமந்தாவை மீண்டும் சந்திக்கும் போதாவது சொல்வார் என்றால், அதுவும் இல்லை. தியேட்டரிலிருந்து ரசிகர்கள்தான் சொல்கிறார்கள் சமந்தாவிடம். திரையிலிருக்கும் அவருக்கு காதில் விழுந்தால்தானே?

சமந்தா அண் கோவுக்கு நடுவில் ஒரு குண்டு பெண் வருகிறார். (பிரபல நடிகர் மோகன்ராமின் மகளாம்) போகிற போக்கில் ஊதி தள்ளுகிறார் நடிப்பை. நகைச்சுவை வேடத்தில் நடிக்க பெண்களே இல்லை என்ற சமீபகால வறட்சியை போக்குவாராக. இவருக்கும் சந்தானத்திற்கும் ஒரு விண்ணை தாண்டிய லவ்வை காட்டி, தன் முந்தைய படத்தையே லந்து பண்ணுகிறார் கவுதம். இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

நான் ரொம்ப பிஸி. டேட்ஸ் பிராப்ளம். அடுத்த சீன்ல இருப்பேனோ, மாட்டோனோ என்று சந்தானம் சொல்வதை புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள் தியேட்டரில்.

இந்த படத்தில் முதலும் முற்றுமாக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான். இன்னமும் இந்த உலகத்தை தனது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கிற இந்த ராஜா, இப்படத்திற்காக தந்திருக்கும் பாடல்கள் எல்லாமே அற்புதம். அதுவும் ‘சாய்ந்து சாய்ந்து’ என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட். ஆனால் எட்டு பாடல்களை பதினெட்டாக பிரித்து ஆங்காங்கே து£வி, வருகிற கொட்டாவியை மேலும் பெரிதாக்க உதவியிருக்கிறாரே, அதுதான் வருத்தம். எங்காவது ரீரெக்கார்டிங் இசைக்கிற அளவுக்கு கேப் கிடைத்தால் போதும். தானே பாடவும் கிளம்பிவிடுகிறாரா? இன்னும் சுத்தம். நெளிகிறார்கள் ரசிகர்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ஓம் பிரகாஷ், எம்.எஸ்.பிரபு இருவருமே கொடுத்த வேலையை அற்புதமாக செய்திருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளர் நளினி ஸ்ரீராமும் பாராட்டுக்குரியவர்.

காதோரம் நரை தட்டியிருக்கிற கவுதம்மேனனுக்கு காதல் ஒன்றே மை. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை எல்லாமே தலைகீழ். அதுதான் புரியல… வொய்?

-அபிஷேக்

Related Posts:

«