பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறே இராணுவ முகாம்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளன. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் முகாம்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரேயொரு இராணுவ முகாமே காணப்பட வேண்டும். அதற்கு மேற்பட்ட இராணுவ முகாம்கள் அமைக்கப்பட முடியாது. அவ்வாறு மேலதிக முகாம்கள் அமைக்கப்பட்டால் இன்றும் யுத்தம் முடிவடையவில்லை என்றே அர்த்தமாகும்.

எனவே இதுபற்றி அரசாங்கமே முடிவு கூறவேண்டும். சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை அமைப்பது எந்தளவிற்கு நியாயம் என்பது பிரச்சனையாகும். சிங்கள மக்கள் தங்கள் பிரதேசங்களில் தமது காணிகளில் புத்தர் சிலைகளை அமைப்பதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். மாறாக பௌத்தம் பின்பற்றப்படாத பகுதிகளுக்குச் சென்று பலாத்காரமாக புத்தர் சிலைகளை அமைப்பதன் நோக்கம் என்ன? என்ற கேள்வியை கேட்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அங்குள்ளவர்களுக்கும் உரிமை உள்ளது.

இவ்வாறு பௌத்த மதத்தை பிரசித்தம் செய்யும்படியும், பலாத்காரமாக சிலைகளை நிறுவும்படியும் புத்தரே கூறியிருக்கவில்லை. இவற்றை புத்தர் நிராகரித்திருந்தார். விம்பிசார ராஜா தனது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பௌத்த மதத்தை பிரசாரம் செய்யவா என்று அன்று கேட்டபோது வேண்டாம் என்றே புத்தர் தெரிவித்திருந்தார்.

பௌத்த மதத்தை பிரசாரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு வழிகள் உள்ளன. வாசிஸ்திர, ஆனந்த மைத்திரி மற்றும் ராஹூல தேரர்களின் வாழ்க்கை நெறிகளை புத்தகமாக தமிழில் அச்சிட்டு அவற்றை அப்பிரதேசங்களில் விநியோகிக்க முடியும். 

அதனை செய்யாமல் புத்தர் சிலையை அங்கும் இங்கும் அமைப்பதானது புத்தருக்கே செய்யும் நிந்தை என்பதோடு முகத்தில் மண்னை வாரிப்போடும் செயற்பாடாகும். புத்தர் சிலையை அமைத்துவிட்டால் அவர் தமிழில் பேசிவிடுவாரா இல்லைத்தானே?” என்றுள்ளார்.

 

Related Posts:

«