பாகிஸ்தானை புறக்கணித்ததன் மூலம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பாரிய தவறினை இழைத்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளால்   நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் அவ்விரு நாடுகளிடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே ஒழிய, விரிசலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அரசாங்கத்திற்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் விடயத்தில் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். இதுபோன்றே எமக்கும் பிரச்சினை வந்தபோது அனைத்து நாடுகளும் எமக்கு உதவ வந்தன. அதனால் அவசரப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிடாமல் பொறுமையாக அவதானித்துக் கொண்டிருந்திருந்திருக்கலாம்.

அரசாங்கம் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில்லை என அரசாங்கம் மாலை 03.00 மணிக்கு அறிக்கையை வெளியிட்டது. எனினும் அன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு பாகிஸ்தான் குறித்த மாநாட்டை ஒத்திவைத்தது.

வெளிவிவகார கொள்கை இதை விடவும் மிகவும் கட்டுக்கோப்பானதாகவும், தூர நோக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆட்சிபீடம் ஏறியதும் சீனாவை பகைத்துக்கொண்டார்கள். நான் அல்ல, தற்போது ஆட்சியில் உள்ளவர்களே சீனாவை பகைத்துக்கொண்டனர்.

இலங்கைக்கு பாரிய பொருளாதார உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கும் நாடாக சீனா தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்தியாவை நான் பகைத்துக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனாலும் யுத்தத்தின் போதும், நாட்டின் அபிவிருத்தியின் போதும் இந்தியா எமக்கு ஒத்து ழைப்பு வழங்கியது. ஆயினும் தேர்தலில் எனக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் போயிருக்கலாம். அது புறம்பான கதை. எனக்குத் தேவையானதை செய்தார்கள்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் இந்தியா எனது அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைத்தது. இப்போது அதில் ஒன்றும் கிடைக்கவில்லை. இவர்களே இந்தியாவை பகைத்துக்கொண்டார்கள்.

வலயத்தில் இரண்டு நாடுகள் மோதிக்கொள்ளும்போது அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர மோதலை தீவிரப்படுத்தவோ, விரிசலை பெரிதாக்கவோ முற்ப டக்கூடாது. பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பாகிஸ்தானும், இந்தியாவும் எமக்கு மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்பதை உணர்நது செயற்பட வேண்டியது மிக மிக முக்கியமாக விடயம்.” என்றுள்ளார்.

 

Related Posts:

«