புதிய அரசியலமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது: எம்.ஏ.சுமந்திரன் 

ஆனாலும், புதிய அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிடுவது, பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும் என்பதால் அமைதி காக்க வேண்டியுள்ளதாகவும், ஆகவே, அவை தொடர்பில் தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அரசியல் தீர்வு விடயத்தில் என்ன நடக்கின்றது, அசாங்கத்துடன் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிப்பதற்கான கூட்டமொன்று வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியல் பேரவையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதன் கீழ் வழிநடத்தல் குழுவொன்றும், அதன் கீழ் ஏழு உபகுழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய அறிக்கைகளை இந்த உபகுழுக்கள் வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றன.

அந்த அறிக்கைகளைப் பார்த்தால், முற்று முழுதாக அர்த்தமுள்ள வகையிலே அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்கின்ற சிபாரிசுடனேயே அந்த அறிக்கைகள் வந்திருக்கின்றன. இந்த அறிக்கைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவைகள் விரைவில் வெளியிடப்படும் .

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு இதுவரையில் 31 தடவைகள் சந்தித்து ஒரு புதிய தேர்தல் முறை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான) அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகார முறை ஆகிய மூன்று விடயங்கள் குறித்து இந்தச்சந்திப்புக்களில் பேசப்பட்டிருக்கின்றன. பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றன. இன்னும் இணப்பாடு எட்டப்பட வேண்டிய விடயங்களும் இருக்கின்றன.

இந்த நிலையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் பற்றியோ அல்லது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்கள் பற்றியோ எதுவும் பேசுவதில்லை என நாங்கள் அனைவரும் தீர்மானித்திருக்கின்றோம். இந்த விடயங்கள் பற்றி முடிவு எட்டப்படாத நிலையில் தகவல்களை வெளியிட்டால், அது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களிலும் இணக்கப்பாடு எட்டப்படுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் இதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படும். அதுவரையில் மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

 

Related Posts:

«