புதிய கட்சிக்கு தமிழர்களின் ஆதரவை தேடி வடக்கில் களமிறங்கும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியப் பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் திரட்டப்படவுள்ளது.

இதற்காக வடக்கு உட்பட தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“யாழ்ப்பாணத்தில் விரைவில் களமிறங்கி அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார். புதியவர்களுக்கு அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளது” என மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“புதியதொரு அரசியல் சக்தி அவசியமென்பது மக்களின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. இது தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆகவே, மக்களின் சக்தியாகத்தான் புதிய கூட்டணி உருவாகவுள்ளது. அந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குரிய ஏற்பாட்டுப் பணிகளையே நான் முன்னெடுத்து வருகின்றேன்.

புதிய அரசியல் கூட்டணிக்கு சிறுபான்மையினத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் புதிய கட்சி அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளார்.

அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ முக்கிய சந்திப்புகளை நடத்தியிருந்தார். விரைவில் ஏனைய சந்திப்புகள் நடைபெறும்” என்று பசில் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ விரைவில் வடக்குக்கும் செல்லவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு சர்வதேசத்துடன் இணைந்து நீங்கள் சதி செய்வதாகவும், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பல சர்வதேச நாடுகள் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் சு.க. குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு பதிளித்த முன்னாள் அமைச்சர் பசில், “கட்சியின் விஸ்தரிப்புப் பணிகளை நானே மேற்கொள்வதனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என் மீது சுமத்தப்படுகின்றன.

இதனை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால், புதிய கட்சிக்கு சர்வதேச உதவிகள் தேவைப்படுமாயின் அதனை வழங்கவும் பல நாடுகள் தயாராகவுள்ளதுடன் எமக்கும் அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

எனினும், தற்போதுள்ள நிலையில் அவ்வாறான எந்தவித உதவிகளும் எமக்கு வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«