புலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன?

அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆற்றிய உரையினைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தெளிவாக நோக்கும் போது அவர் கூறிய உரையில் முன்னாள் பாதுகாப்பு செயளாளருக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை.

ஆனாலும் இவை அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தவும் நல்லாட்சியில் உட்பூசலை உண்டு பண்ணவும் திட்டமிட்டு ஜனாதிபதியின் கருத்து மாற்றப்பட்டு அதி வேகமாக பரப்பட்டு விட்டது என்பதே உண்மை என தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தன் உரையின் போது,

“முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றிருந்தார்கள் இது தொடர்பில் நான் அதிருப்தி தெரிவிக்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் செய்த கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நான் அதிருப்தி தெரிவித்துக் கொள்கின்றேன்”. என்றே தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த வார்த்தைகள் ராஜபக்சர்களுக்கு ஆதரவு கருத்தாக மாற்றப்பட்டது என்பது தற்போது தெளிவாகின்றது.

அதன் பின்னர் அவருடைய உரையினை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு கருத்தாக திரிபுபடுத்தப்பட்டு கூறப்பட்டு வருகின்றது.

இதேவேளை இதற்கு முன்னர் வடக்கு முதல்வரின் உரையையும் மாற்றி அவர் விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்டு வர முயன்று வருகின்றார் எனக் கூறி தென்னிலங்கை கொதித்துப்போனது.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு வகையான போராட்டங்கள் இடம்பெற்றது ஆனாலும் நல்லாட்சியின் பாரா முகத்தால் அது எட்டாக்கனியாகிப்போய் விட்டது.

தற்போது ஜனாதிபதியின் உரையினையும் நல்லாட்சிக்கு எதிராக மாற்றப்பட்டு பல்வேறு பட்ட சர்ச்சையினை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகின்றது.

மைத்திரியையும் மஹிந்தவையும் இணைத்து விட்டால், அல்லது ரணில் மைத்திரிக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தி விட்டால் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது மிக எளிதான விடயமே.

இவை அனைத்திற்கும் பின்னணியில் இருந்து செயற்படுபவர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றது எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை தனது கட்சியின் நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள மஹிந்த தரப்பினருடன் அணைந்து கொள்ள மைத்திரி இரகசியமாக செயற்பட்டு வருகின்றாரா? என்ற வகையிலும் சிந்திக்கத்தோன்றுகின்றது.

காரணம் புதுக்கட்சி மாயை சித்தரிக்கப்பட்டு அதனூடாக சுதந்திரக்கட்சியே வலுப்படுத்தப்பட்டு வருவது தற்போது அவதானிக்கப்படத்தக்கதே.

தற்போது மைத்திரியின் கருத்தும் அடங்கிப்போய் விட்டது. இதன்போது அடுத்த திட்டம் விடுதலைப்புலிகள் மீண்டும் வருகின்றார்கள் என்ற பயத்தை ஏற்படுத்துவதே ஆகும். ஏற்கனவே விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள், மீண்டும் வருவார்கள் எனக்கூறப்பட்டு வருகின்றது.

அதற்கான ஆயத்தமாக அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் சர்வதேச நாடுகளில் பதுங்கி உள்ளார்கள் என்ற கருத்துடன் சேர்த்து தொடர்ந்தும் பல்வேறு வகையாக கருத்துகள் விடுதலைப்புலிகள் தொடர்பில் எழுப்பப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்தும் ஆட்சியை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வி அடைந்து வருமானால் அடுத்து விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்ட வர அல்லது பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட வில்லை என்பதனையும் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த தயங்க மாட்டார்கள் எனவும் தென்னிலங்கை புத்தி ஜுவிகள் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts:

«