போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்காது: மனோ கணேசன்

போர்க்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ள அவர், “அரச மொழிக் கொள்கை தொடர்பில் விவாதத்திற்கு இடமில்லை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை மாத்திரமே உள்ளது. நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் சர்வதேசத்தின் அழுத்தம் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அது தவறு. யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லை. பான் கீ மூன், மோடி யார் வேண்டுமோ நாட்டிற்கு வருகைதர முடியும். எனினும், எமக்கு வேண்டியதையே நாம் செய்வோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு புகையிரத நிலையத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்து, தமிழ் மொழியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை மனோ கணேசன் சோதனையிட்டார். அப்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “போர்க்குற்றச் விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இருக்காது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கூறியுள்ளனர். எனினும் ஒருசிலர் இல்லை என வாதிட்டனர். தற்போது உண்மை தெரியவந்துள்ளது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்குத் தேவையான வகையில் நாம் முடிவெடுப்போம். இதுவே அரசாங்கத்தின் கொள்கை. அனைத்து மக்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதுவே எனது அமைச்சின் கொள்கை.

புகையிரத சேவைகளின் விஸ்தரிப்பின் ஊடாக அரச மொழிக் கொள்கையும் உடன் பயணிக்க வேண்டும். அனைத்து புகையிரத நிலையங்களிலும் மும்மொழிகளும் தெரிந்த பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதுவே எனது எதிர்ப்பார்ப்பு. புகையிரத நிலையங்களில் இரண்டு மொழிகளிலும் அறிவித்தல் அவசியம். சில இடங்களில் உள்ள அறிவித்தல் பலகைகளில் சிங்கள மொழி பெரிதாகவும், தமிழ் மொழி சிறிதாகவும் காணப்படுகின்றது. அதனை வாசிக்க தமிழ் மக்களுக்கு கண்ணாடியை வழங்க வேண்டும். இல்லாவிடின் வாசிக்க முடியாது.” என்றுள்ளார்.

 

 

Related Posts:

«