முன்னாள் போராளிகளை சந்தித்தார் வடமாகாண அமைச்சர்


துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதன்போது தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டம் அவர்களுக்கு சென்றடையாமைக்கான காரணங்களை ஆராய்ந்ததோடு, அவை அவர்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கையினையும் மேற்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது தமக்கு வேலைவாய்ப்புக்கள் தரப்படும் சந்தர்ப்பத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் தமக்கு நிரந்தரமான தொழில் இருப்பின் தம்மால் வாழ்கையை கொண்டு நாடாத்த முடியுமெனவும் முன்னாள் போராளிகள் இதன்போது தெரிவித்தனர்.

அப்பிரதேசத்தில் எவ்வாறான தொழிற்சாலையை நிறுவி வேலைவாய்ப்பை வழங்கமுடியுமென ஆராய்ந்ததோடு, அதற்கான ஏற்பாடுகளை தாம் செய்து தருவதாக டெனிஸ்வரன் உறுதியளித்தார்.

மேலும் வாழ்வாதார உதவிகள் பற்றி அறியாமைக்கு கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இயங்காமையே காரணம் எனவும் அவ்வாறு இயங்காத சங்கங்களை இனங்கண்டு தமக்கு தெரியப்படுத்துமிடத்து அவற்றின் நிருவாகத்தை கலைத்து புதிய நிருவாக தெரிவுக்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக துடிதுடிப்புள்ள இளைஞர்கள் நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் பொதுநோக்கோடு நேரத்தை ஒதுக்கி கிராமமும் மக்களும் முன்னேற உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கி.அ.ச மற்றும் மா.கி. அ.ச என்பவற்றிற்கு பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உபயோகித்தாலே பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனவும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் போது விசேட தேவையுடயோரை அவர்களே இனங்காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தம்மால் ஆன அபிவிருத்திகளை தாம் அப்பிரதேசத்திற்கு செய்து வருவதாகவும் குறிப்பாக துணுக்காய் அக்கராயன் வீதி அபிவிருத்தி செய்வதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன் அச்சந்திப்பு இரவு 8 மணி வரை நீடித்தது.

Related Posts:

«