மெட்ராஸ் கஃபே திரைப்படத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் : ராமதாஸ்

“மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தின் அனைத்து மொழி பதிப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பாலிவுட் திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் மெட்ராஸ் கஃபே என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து உள்ளீர்களா என்று ஜான் ஆபிரகாமிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை’ என்று மழுப்பலாகப் பதிலளித்தார். ஆனால், இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ராஜபட்ச அரசின் ஆதரவுடன் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பதிலிருந்தே இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும். எனவே, “மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தின் அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதே போன்று தமிழகத்தின் மேலும் பல தரப்பினரும் இத்திரைப்பட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Related Posts:

«