மெட்ராஸ் கஃபே: யாழ்ப்பாணம் செல்லும் ரா உளவாளியின் கதை

மெட்ராஸ் கஃபே திரைப்படம் இலங்கை அரசுக்கு நன்மதிப்பை வழங்க எடுக்கப்பட்டதாக தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன

மெட்ராஸ் கஃபே திரைப்படம் இலங்கை அரசுக்கு நன்மதிப்பை வழங்க எடுக்கப்பட்டதாக தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன

எதிர்வரும் வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான – ஜான் ஆப்ரஹாம் அறிவித்துள்ளார்.

இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து தமிழோசையிடம் பேசிய அப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார், ‘மெட்ராஸ் கஃபே ஒரு ஆவணப் படம் கிடையாது; 90களில் இருந்த யாழ்ப்பாணத்தை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு ரகசிய உளவாளியின் கதை என்று கூறியுள்ளார்.

இந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கஃபே படத்தின் முக்கிய நடிகர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானவர்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகளை கொச்சைப் படுத்துவதாக தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியதுடன் வழக்குகளையும் தொடுத்ததால் – அந்தப் படத்திற்கு அதிக விளம்பர வெளிச்சம் கிடைத்துள்ளது.

திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் சில பாடல் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா-வில் பணிபுரிய செல்லும் ஒரு இராணுவ அதிகாரியைப் பற்றிய கதைதான் மெட்ராஸ் கஃபே.

ரகசியப் பணிக்காக யாழ்ப்பாணம் போகும் படத்தின் கதாநயகனின் அனுபவங்களைத்தான் திரையில் காண்பீர்கள் என்கிறார் அதன் இயக்குனர் ஷூஜித் சர்கார்.

‘நான் ஒரு படத்தை எடுத்துள்ளேன். நான் எந்த சார்பையும் எடுக்கவில்லை. இப்படி அப்படி திரும்பாமால் ஒரு சிறிய கோட்டில் நான் பயணித்துள்ளேன். எனது முதல் படம் காஷ்மீரைப் பற்றியது. இந்தியர்கள் காஷ்மீரை எப்படி பார்க்கிறார்கள் – காஷ்மீரிகள் இந்தியாவை எப்படி பார்க்கின்றனர் என்று நான் அதில் சொல்லியிருக்கிறேன்’ என்றார் ஷூஜித் சர்கார்.

‘காஷ்மீரியப் பெண் இந்திய இராணுவ அதிகாரி மீது காதல் கொள்வதையும் நான் சொல்லியிருக்கிறேன். எனது இரண்டாவது படம் விந்து தானம் குறித்தது. நான் படமெடுத்த காலத்தில் இதைப் பற்றிப் பேசவே தயக்கம் இருந்தது. இது ஏதோ ஆபாசப் படம் என்று சிலர் கூறினார். ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு பல பாரட்டுக்கள் வந்தன’ என்றும் கூறினார் இயக்குநர் சர்கார்.

‘இது ஒரு ஆவணப் படம் இல்லை. படத்தின் நாயகன் ஒரு இடத்திற்குப் போகிறார் அவரது பார்வையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ரகசிய வேலைக்காக யாழ்ப்பாணம் செல்லும் படத்தின் நாயகன் ஜான் ஆப்ரஹாம் அங்கே இந்தியாவை பாதிக்கக் கூடிய ஒரு சதித் திட்டத்தை கண்டறிவதுதான் இந்தக் கதை’ என்றார் ஷூஜித் சர்கார்.

ஷூஜித் சர்கார் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே பாராட்டுக்களையும் – விருதுகளையும் வென்றுள்ளன.

இலங்கை அரசு மீது நன்மதிப்பை உருவாக்க இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அதிபர் ராஜபக்ஷ நிதி உதவி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு திரைப்பட தயாரிப்புக்கு பல வசதிகளை செய்துள்ளது என்றும் தமிழ் நாட்டில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை நடிகர் ஜான் ஆப்ரஹாமும் வையாகாம்-18 என்ற நிறுவனத்தினரும் இணைந்து தயாரித்துள்ளனர். வையாகாம்-18 மும்பையில் இருக்கும் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம்.
மெட்ராஸ் கஃபே படத்திற்கு ஏற்கனவை தணிக்கை வாரியத்தின் சான்று கிடைத்துவிட்டது.

படம் வந்த பிறகு அதைப் பார்ப்பவர்கள் கூறும் விமர்சனத்தைத் தான் ஏற்பேன் என்று கூறும் ஷூஜித் சர்கார், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் புரிந்து கொள்ள இப்படம் உதவும் என்கிறார்.

‘நீ ஒரு வங்காளி – உனக்குத் தமிழ் பிரச்சனையைப் பற்றி என்ன தெரியும் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கும் இதற்கும் சம்மந்தம் கிடையாது என்கிறார்கள். இந்தப் தமிழ் பிரச்சனை பற்றி தெரியாமல் இருக்கும் நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் இது பற்றி தெரிந்து கொள்வார்கள், என்று நான் நம்புகிறேன் என்று தமிழோசையிடம் கூறினார் ஷூஜித் சர்கார்.

Source http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130817_maddrasscaffedirector.shtml

Related Posts:

«