மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசு- அனைத்து கட்சி கூட்டம் கண்டனம் #dmk

சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்ததாக திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

DMK all party meet condemn Centre on Cauvery row

கர்நாடக அரசின் வழக்கறிஞர் தண்ணீர்ப் பங்கீடு குறித்து காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட வேண்டுமென்று வாதிட்டாரே அன்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்மந்தமான உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியத்தை 4-10-2016க்குள் அமைக்க ஒப்புக் கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நதி நீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலைமைகளையும் அதற்கான அடிப்படைகளையும் மேலாண்மை வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.

இதன் தொடர்ச்சியாக மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூறினார்.

உச்ச நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு, அதை நிறைவேற்றுவதற்கு 24 மணி நேரம் மட்டுமே இருந்த தருணத்தில், ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டது.

DMK all party meet condemn Centre on Cauvery row

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை யென்றும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க முடியுமென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசே இறுதி முடிவெடுக்க முடியுமென்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டில் ஓர் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து நடுநிலையிலிருந்து தவறி விட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்படும் நடுவர் மன்றங்களின் உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானதாகும் என்றும், நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் பதிவிட்ட உடனேயே அதனை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவ்வாரியம் குறித்த அறிவிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அச்சட்டம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

எனவே, நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956ன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படியான கடமையும் பொறுப்புமாகும்.

உச்ச நீதி மன்றத்தில் காவிரிப் பிரச்சினை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை 19-10-2016 அன்று நடைபெற்றது. விசாரணையின் போது மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.

தமிழகத்திற்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டினை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டதன் காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமான கோரிக்கை தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்சினை முன்னணிக்கு வந்திருக்கின்றது.

வேண்டுமென்றே நீதி – நியாயத்திற்கு எதிராகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போட்டு, பிரச்சினையை திசை திருப்பும் மத்திய அரசின் முயற்சியையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/1SF0wu-4iPo/dmk-party-meet-condemn-centre-on-cauvery-row-265674.html

Related Posts:

«