யாழ்ப்பாண சர்வதேச சினிமா விழா 2016;  செயற்பாட்டாளர் ஜெரா எழும்பும் குரல்!

அத்துடன் வேகமாக தன் இன அடையாள அழிவை எதிர்நோக்கியிருக்கும் ஈழத்தமிழர்களிடையே நல்ல சினமா பார்வையை ஏற்படுத்த நீங்கள் அனைவரும் எடுத்திருக்கும் முயற்சியும் போற்றுதலுக்குரியது.

இந்தத் திரையிடலின் விளைவாக நம் மத்தியில் புதிய சினமா படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணத்திலும், சினமா படைத்தலை அவர்கள் நோக்கும் விதத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதில் பெரு நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் நானும் ஒருவன்.

ஆனாலும் இந்த விழா நாட்களை நினைக்கும்போது, விழித்திருக்கும் கண்ணுக்குள் யாரோ குண்டூசியை இறக்குவது போன்ற வலி ஏற்படுகின்றது. விழா ஏற்பாட்டாளர்களாகிய உங்களுக்கு, எங்களை விட நினைவுகள் அதிகமாக இருக்கும் என நம்புகின்றேன். இப்போதைய புத்திஜீவிகளாகிய நீங்கள் விவரமறிந்த வருடங்களில்,இந்த மாதத்தில், 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில், நல்லூர் பக்தித் தெருவில் தன்னைப் பசியால் எரித்துக்கொண்ட தூயவனைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும் என நம்புகின்றேன். இந்த இனத்துக்கு விடுதலை வேண்டி கொதித்துக் கொதித்து அடங்கிய அவனின் மூச்சுக் காற்று அதே சூட்டுடன் உங்களைத் தழுவியிருக்கும். அந்த நொடியில் உங்கள் இதயம் புல்லரித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஏனெனில் யாழ்ப்பாணத்தின் புத்திஜீவிகளாகிய நீங்கள் அந்தத் தூயவனின் ஆன்மா வெளியேறிய கனங்களில் நல்லூர் பக்தித் தெருவின் வாசனையை நுகரத் தவறியிருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். இவ்வளவு கனதியான அவனின் காலத்தை விழாவெடுத்துக் கொண்டாட எங்கள் மனங்கள் தயாராக மறுக்கின்றன. ஆனால் நீங்கள் தயார்…!

அந்த நாட்களை புனிதப்படுத்திக்கொள்ளவும், உயர்ந்தபட்ச அகிம்சையை மேலும்மேலும் உலகிற்குப் போதிக்கவுமே எங்கள் மனம், மூளை அனைத்துமே விரும்புகின்றன. எனவே உங்கள் விழா எங்களின் உணர்வை அவமானம் செய்கின்றது என்பதை அறிவீர்கள்.

கடந்த வருடமும் இந்த அகிம்சை நாட்களில்தான் யாழ்ப்பாண சர்வதேச சினமா விழாவினை நடத்தியிருந்தீர்கள். அப்போதும், எங்கள் உணர்வை அவமானப்படுத்தாதீர்கள் என உங்களிடம் சமூகவலைதளங்களில் நண்பர்கள் மன்றாடியபோது, நிகழ்வு வேறு ஒரு இடத்தில், ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டது, இனி அதில் மாற்றங்களைச் செய்யமுடியாது எனத் தெரிவித்திருந்தீர்கள். இம்முறை மறுபடியும் அதேநாட்களில் விழா எடுப்பதன் அர்த்தம் என்ன? “அரசியலே அற்ற நிகழ்வின்” அரசியல் என்ன என்றும் விளங்கவில்லை.

வருடத்தில் பல நாட்கள் வெறுமையாகக் கடந்து போகின்றன. அதில் ஒரு வாரத்தை…ஒரு மாதத்தை… தெரிவுசெய்யலாமே..!

இறுதியாக, இந்தக் கடிதத்தில் தவறுவகள் ஏதும் இருப்பின் உங்கள் பெரிய மனதால் மன்னித்துவிடுங்கள். போரின் சகல பக்கங்களையும் பார்த்துக் கடந்த சாதாரணன் என்றவகையில் சான்றோர்களாகிய உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன். நன்றி.

இப்படிக்கு,

ஜெரா

****

*குறிப்பு: இந்தத் கடிதத்துக்கான பதில்கள் அல்லது மறுப்புக் கருத்துக்கள் உத்தியோகபூர்வமான தரப்புக்களினால் வெளியிடப்பட்டால், அவையும் பிரசுரிக்கப்படும்: ஆசிரியர் குழு, 4TamilMedia

 

Related Posts:

«