யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்கு ஆறாவது முறையாக தேசிய விருது..!

இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது.

ஆறாவது தடவையாக இந்த விருது சுன்னாகம் பொதுநூலகத்திக்குக் கிடைத்துள்ளது. நாளை 07ஆம் திகதி காலை 09.30 மணியளவில் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின்

பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி.சுதர்சன் ஆகியோர் இணைந்து விருதினைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

ஆறாவது தடவையாக தேசிய விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, சுன்னாகம் பொதுநூலகமானது கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கின்றது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத விருதினையும் பெறவிருப்பது சுன்னாகம் பொதுநூலகச் சமூகம் சார்ந்து மிகவும் மனமகிழ்வைத் தருகிறது.

இந்த விருது எமது நூலகக் குடும்பத்தினர் மட்டுமல்ல வலி. தெற்குப் பிரதேச சபையின் ஊக்கத்தினாலும் கிடைத்துள்ளது.

அதற்கு மேலாக எமது நூலக வளங்களைச் சரியான வகையில், மிகவும் பயனுறுதியுடன் பயன்படுத்திய வாசகர் சமூகமும் இந்த விருதினை நாங்கள் பெறுவதற்குக் காரணமாகவுள்ளது.

கடந்த 2007, 2009, 2011, 2012, 2013 ஆண்டுகளிலும் தேசிய விருதினையும், 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் சிறந்த நுலகத்திற்கான முதலாவது இடத்தினையும், 2014ஆம் ஆண்டு சிறந்த பொது நுலகங்களிற்கான தேசிய ரீதியிலான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும் எனவும் தெரிவித்தார்.

Related Posts:

«