யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை; சந்தேகத்தில் 5 பொலிஸார் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

யாழ். பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷன் (வயது 24) ஆகியோரோ உயிரிழந்த மாணவர்களாவர். மரண விசாரணையின் போது, சுலக்ஷனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் தாக்கிய காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதாலேயே மாணவர்கள் மரணமடைந்தனர் என்று பொலிஸார் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்.

எனினும், குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர், நேற்று நள்ளிரவு  துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டதாகவும், தாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த  இன்னுமொருவர்  தெரிவிக்கையில்,  “நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிஸாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிஸா நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தேன்.” என்றுள்ளார்.

இதனிடையே, அதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில், “நான் அதிகாலை 04.00 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிஸார் நின்று இருந்தார்கள். அதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள். நான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி  வீட்ட  போகும்  போது தான்  விபத்து நடந்தது தெரியும்” என்றுள்ளார்.

காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில், “நான் காலை 07.00 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல்  நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.” என்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும், இன்றைய தினம் மதியம் 12.00 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12.00 மணிக்கு பின்னரே பொலிஸார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.

உயிரிழந்த மாணவர்களின் பிரேத பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.  அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யப்பட்டுள்ளது. 

நன்றி- குளோபல் தமிழ் நியூஸ்

 

Related Posts:

«