யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் பதில் முதலமைச்சர் த.குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (20.10.2016) நள்ளிரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதே வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் வன்முறை, செயற்பாடுகளில் ஈடுபடாது துரித நீதி பெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மை யான நிலைமையை அறிந்து கொள்ளவோ, எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது. 

இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆதலினால், இவ் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்கபூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம். 

அம் மாணவர்களின் இழப்பினால் தாங்கொணாத் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்  கொள்கின்றோம். 

இதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடக்கு மாகாண சபை, அரசியற் பேதமில்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதனை எடுத்துக் காட்டவே.” என்றுள்ளது.

 

Related Posts:

«