யேமெனில் 72 மணித்தியால யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ஐ.நா

ஞாயிற்றுக்கிழமை யேமெனில் போரில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சிப் படையான ஹௌத்திக்களின் முக்கிய தொடர்பாளர் ஒருவருடன் தான் பேசிய பின்னரே யுத்த நிறுத்தத்துக்கு சம்மதித்ததாக அதிபர் மன்சூர் ஹதி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் யேமெனுக்கான ஐ.நா சமாதானத் தூதுவர் ஆகியோர் யேமெனில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இரு தரப்பும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமை அழுத்தம் தெரிவித்திருந்தனர்.

ஈரானின் ஆதரவுடன் சவுதி அரேபியாவின் வறிய நட்பு நாடான யேமெனின் தலைநகர் சனாவை ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைப்பற்றியது தொடக்கம் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. எனினும் மார்ச் 2015 ஆம் ஆண்டு முதல் தான் சவுதி தலைமையிலான அரபு கூட்டணி நாடுகளின் வான் தாக்குதல் யேமெனில் ஷைட்டி ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப் பட்டது. இதன் பின்பு தான் அங்கு உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்தது.

ஐ.நா இன் கணிப்பின் படி யேமெனில் இதுவரை உள்நாட்டுப் போர் காரணமாக கிட்டத்தட்ட 6900 பொது மக்கள் கொல்லப் பட்டும் 35 000 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் 3 மில்லியன் பேர் வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி யேமென் குழப்பநிலை தொடர்பில் லண்டனில் ஐ.நா தூதுவர் மற்றும் பிரிட்டன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப் பட்ட யுத்த நிறுத்தத்தை அடுத்து குவைத்தில் இடம்பெற்ற முதல் சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யேமெனில் எதிரணியான கிளர்ச்சிப் படை இன்னமும் பலம் பொருந்தியதாகவே உள்ளது. முன்னால் அதிபர் அலி அப்துல்லா சாலேஹ் இற்கு ஆதரவான ஹௌத்தி கிளர்ச்சிப் படை வசம் அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அடங்கலான வடக்கின் பெரும் பகுதியும் ஏனைய மேற்கு மற்றும் மத்திய யேமெனும் பிடியில் உள்ளன. யேமெனின் மூன்றாவது மிகப் பெரிய நகரான டாயேஷ் முற்றிலும் ஹௌத்திக்களின் கையில் உள்ளது. அரச படை இதுவரை யேமெனின் தெற்கு  மற்றும் கிழக்கு பகுதிகளைக் கைப்பற்றி உள்ள போதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இன்னமும் அடையவில்லை என்றே கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«