வடக்கில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்படுகிறது!– ரணில் (ஐதேக செய்திகள்)

வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும்.

பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போதும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டமொன்றின் போதும் அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் குழப்பங்களை விளைவித்தவர்கள் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது புலனாகியுள்ளது.

இதன் மூலம் இந்தத் தாக்குதல்களுடன் அரசாங்கத்திற்கு நேரடித் தொடர்பு காணப்படுகின்றது என்பது தெளிவாகியுள்ளது.

சாதாரண அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவே அனுமதி அளிக்காத அரசாங்கம் வட மாகாணசபைத் தேர்தலை சுயாதீனமாக நடாத்துமா என்பத சந்தேகமே.

எனவே, வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமையினால் இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது – லக்ஸ்மன் கிரியல்ல

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அளித்த வாக்குறுதி நிறைவேற்றடாமையினால் இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி இந்தியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.

13ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தின் மூலம் நாடு பிளவுபடும் என சிலர் போலிப் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இந்திய மத்திய அரசாங்கம் சில அதிகாரங்களை வைத்துக் கொண்டு மாநிலங்களிடம் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளது.

அதிகாரப் பகிர்வின் மூலம் இந்தியாவில் பிளவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் எனினும் அவ்வாறான பிளவுகள் எதுவும் ஏற்படவில்லை.

மாகாணசபைகளின் மூலம் நாடு பிளவடைய வாய்ப்பில்லை. மாறாக நாட்டுக்குள் ஐக்கியப்பாடு ஏற்படும்.

அதிகாரத்தை பகிராவிட்டால் நாட்டில் பிளவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் அரசாங்கம் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய மதத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐ.தே.க தீர்மானம்

நாட்டின் முக்கிய மதத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மதத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை அளிக்கும்.

மஹாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் சில தரப்பினர் நாட்டில் கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Posts:

«