வடக்கு முதல்வர் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ கூறிய கருத்துக்கு கடும் கண்டனம்..!

மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ உட்பட தெற்கிலேயிருப்பவர்கள் எழுக தமிழ்ப் பேரணியையும், முதலமைச்சர் ஆற்றிய உரையையும் ஒரு தீவிரவாதப் போக்குடையதாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள்.

எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களுடைய அபிலாசைகளாகச் சொல்லப்பட்டவை. அது தொடர்பாக என்ன நிலைப்பாடு? இது தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கிறதா?

அல்லது அது தொடர்பாக வேறு பார்வைகள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் நிமல்கா பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் சொல்லாமல் வடமாகாண முதலமைச்சருடைய பிள்ளைகளை இந்த விடயத்தில் இழுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இது மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணாண்டோ போன்றவர்களின் தராதரத்திற்குக் குறைவானது என தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று வடமாகாண முதலமைச்சரும் தனது இரு பிள்ளைகளையும் போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டும் என தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்னாண்டோ கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பிய போது அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சரை ஒரு தீவிரவாதியாகக் காட்டுவதும், அவரை அரசியற்பரப்பிலிருந்து ஓரங்கட்டுவது அல்லது விளிம்பு நிலைக்குத் தள்ளுகின்றதொரு முயற்சி தான் இடம்பெறுகின்றது

அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அரசியல் கட்சிகளிருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் தெற்கிலே இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் தானும் மக்களால் எழுக தமிழ் பேரணியில் எழுப்பட்ட கோரிக்கைகளுக்குத் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமலிருப்பது தான் கவலை.

பொதுபலசேனாவும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமால்கா பெர்ணான்டோவும் வடக்கு முதலமைச்சரைத் தாக்கிப் பேசுகிறார்கள் என்றால் தெற்கிலே உள்ள அரசியல் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்பதில் எங்களுக்கு மிகப் பெரிய கவலை தோன்றுகிறது.

எங்களுக்குப் பொதுபலசேனா அமைப்பைப் பற்றியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளைப் பற்றியும் தெரியும்.

ஆனால் தெற்கிலுள்ள முற்போக்கான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அரசியலையும் தாண்டிப் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து கோரிக்கைகள் வைத்துப் போராடும் போது அந்தக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தாமல் இனவாத அரசியல் பேசுவது என்பது எவ்வாறு ஒரு ஆரோக்கியமான நல்லிணக்கமாக அமையும்?

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்குப் பதில் என்ன? பதில் இல்லையா? இது குறித்து தென்னிலங்கையிலுள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாவது பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts:

«