வரலாறு முக்கியம்… நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.. ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் வசதியாக நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு நாளும், 61ஆம் ஆண்டு தொடக்க நாளும் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Celebrate Nov. 1 as a Tamil Nadu day: Dr. Ramadoss

1956-ஆம் ஆண்டு வரை இன்றைய தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிறிய திராவிட நாடாகவே இருந்தது. மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் 14 மாநிலங்களாகவும், 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகம் பயனடைந்ததை விட இழந்ததே அதிகமாகும். கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்துடன் இணைக்கப் பட்டது என்றாலும், தமிழர்கள் வாழும் பல பகுதிகள் ஆந்திரா மற்றும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தான் முல்லைப் பெரியாறு தீராத சிக்கலாக மாறியிருக்கிறது. அதேபோல், வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. கே. வினாயகம், ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்கள் வட எல்லை மீட்புக் குழு அமைத்து போராடியிருக்காவிட்டால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகள் ஆந்திரத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். தலைநகர் சென்னை கூட நமக்கு சொந்தமாக இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் பாடுபட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் வசதியாக நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/f-RBZZ-BDxY/celebrate-nov-1-as-tamil-nadu-day-dr-ramadoss-266071.html

Related Posts:

«