விண்ணுக்கு வெற்றிகரமாக குரங்கைச் செலுத்திய ஈரான்

ஈரான் இன்று திங்கட்கிழமை வெற்றிகரமாக ஒரு குரங்கை விண்ணுக்கு அனுப்பியிருப்பதாக ஊடகங்களுக்கு அதிரடியாக அறிவித்துள்ளது.


இக்குரங்கு பிஷ்கம் எனும் ராக்கெட்டு மூலம் பூமியில் இருந்து 120 Km உயரத்துக்குச் சென்று அங்கிருந்து திரும்பும் முன் துணை ஒழுக்கில் செல்லும் விமானத்தில் இணைந்தது என ஈரான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுக்குள்ளே அடைக்கப் பட்டிருந்த இக்குரங்கின் புகைப்படங்களை ஈரானிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. இந்நிலையில் ஈரான் தனது விண்வெளி செயற்திட்டங்கள் என்ற போர்வையில் செய்வதெல்லாம் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய ஏவுகணைகளைப் பரிசோதனை செய்வதற்கே என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மேலும் இத்தகைய ஏவுகணைகள் அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை மிக்கன எனவும் கூறப்படுகின்றது.

எனினும் ஈரான் இக்குற்றச்சாட்டுக்களை மறுப்பதுடன் தனது அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகள் சமாதான நோக்கத்தை அனுசரித்தே மேற்கொள்ளப் படுகின்றன எனத் தெரிவித்து வருகின்றது.

இதேவேளை செய்மதி தொழிநுட்ப நிபுணரான பட் நொரிஸ் BBC இற்கு செவ்வி அளிக்கையில் ஈரான் விண்ணுக்கு குரங்கை அனுப்பியிருப்பது தற்போது அது கொண்டிருக்கும் விண்வெளித் தொழிநுட்ப ஆற்றலுக்கு வலுச் சேர்க்கக் கூடிய ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த முன்னேற்றம் 4828 Km/h வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணையின் தொழிநுட்பத்தைப் பரிசோதித்தமைக்குச் சமனானது எனவும் சமீப வருடங்களாக ஈரான் இது போன்ற பல ஏவுகணைப் பரிசோதனைகளை நிகழ்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தப் பயணத்தில் குரங்கு காயம் எதுவும் இன்றி உயிர் பிழைத்ததைப் பார்க்கும் போது இந்த ஏவுகணைகளின் வேக அதிகரிப்போ அல்லது குறைவோ மோசமானதாக இல்லை எனத் தெளிவாகுவதாகவும் இவர் கூறியுள்ளார்.

2010 இல் ஈரான் ஏற்கனவே விண்ணுக்கு வெற்றிகரமாக ஒரு எலி, ஆமை மற்றும் புழுக்களை விண்ணுக்குச் செலுத்தியிருந்தது. 2011 இல் ஒரு குரங்கை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதேவேளை ஈரானின் அதிபர் அஹ்மதினெஜாட் 2010 ஆம் ஆண்டு தனது நாடு 2019 அளவில் ஒரு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் என அறிவித்திருந்தார். ஈரான் முதன் முறையாகத் தனது நாட்டில் தயாரிக்கப் பட்ட செய்மதியை பூமியைச் சுற்றி வரும் ஒழுக்கில் 2009 ஆம் ஆண்டு செலுத்தியிருந்தது.

Related Posts:

«