வேட்டை சினிமா விமர்சனம்

Read In English
இந்த பொங்கலுக்கு நண்பனா? வேட்டையா? எதை முதலில் எந்த நல்லப் படத்தை பார்க்கலாம் என நினைத்ததில் முதலில் வேட்டை பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

முதலில் மாதவனுக்கும் ஆர்யாவுக்கும் என் நன்றிகள்.காரணம் இரண்டு கதாநாயகர்களாக படத்தை பகிர்ந்து நடித்திருக்கிறார்கள். நிறைய நடிகர்கள் இந்த மாதிரி இரண்டு நாயகர்கள் இருக்கும் கதைகளில் நடிக்கமாட்டார்கள்.ஆனால் ஹிந்தி படங்களில் இது சகஜம்.

மாதவன் – இவரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.காரணம்… ஆர்யாவின் கதாப்பாத்திரம் தன் பாத்திரத்தை விட சிறப்பானதாகவும், நிறைய
காட்சிகளில் முக்கியத்துவத்துடன் இருந்தாலும், பெயர் போடும்போதுக்கூட ஆர்யாவின் பெயர் முதலில் வருவதையும் பெருந்தன்மையுடன் இவர் ஒத்துக்கொண்டிருக்கிறார். மதிக்கின்றோம் மாதவனை!

சரி, கதைக்கு வருவோம்….

மாதவன் அண்ணன், ஆர்யா தம்பி.மாதவன் ரொம்பவும் சாதுவானவன் யாரிடமும் சண்டைக்குப் போகாதவன் சுருக்கமாய் சொன்னால் ஒரு கோழை!

ஆர்யா -துடுக்கானவன் அண்ணனுக்காக எதையும் செய்பவன், கோபக்காரன்.இவர்களின் அப்பா ஒரு கண்டிப்பான நேர்மையான போலீஸ்காரர்.தாத்தாவும் போலீஸ்காரராய் இருந்தவர்.ஆக மொத்தம் ஒரு போலீஸ் குடும்பம்.

திடீரென்று அப்பா இறந்துவிடுவதால், அப்பாவின் போலீஸ் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது.தைரியமில்லாத மாதவன் வேலையை மறுக்க ஆர்யா தைரியம் கொடுத்து மாதவனை ஒத்துக்கொள்ள செய்கிறார்.புது ஊருக்கு வருகிறார்கள். அந்த ஊரில் இரண்டு மிகப்பெரிய தாதாக்கள் இரண்டு வெவ்வேறு குழுக்களாய் அவ்வப்போது மோதிக்கொள்கிறார்கள். காவல் நிலையம் முன்பே போலீஸ்காரர்கள் புடைசூழ எதிரிகளை எரிக்கிறார்கள், சவால் விடுகிறார்கள்.மாதவன் உட்பட வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

புதிதாய் வேலைக்கு வந்த மாதவனை ரௌடிகளிடம் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற அனுப்புகிறார்கள். ஆனால் மாதவனுக்குப் பதில் ஆர்யா அவர்களை துவம்சம் செய்து பெண்ணைக் காப்பாற்றி மதவனிடம் சேர்க்கிறார்.இதே மாதிரி இரண்டு மூன்று சம்பவங்களில் ஆர்யாவால் மாதவன் வீரமான போலீஸ்காரர் என்றுப் பெயர் எடுக்கிறார். இதை மோப்பம் பிடித்த தாதாக்கள் ஒரு அணியாய் சேர்ந்து மாதவனை தாக்கி கால்களை உடைக்கிறார்கள். பின்னர் மாதவனும் ஆர்யாவும் எப்படி வில்லன்களை அழிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை!

என்னடா இது கதையில் கதாநாயகிகள் இல்லையா? என கேட்பது என் காதில் விழுகிறது.அண்ணன் மாதவனை திருமணம் செய்யும் அக்கா சமீரா ரெட்டி, தம்பி ஆர்யாவை காதலிக்கும் சமீராவின் தங்கை அமலா பால். இதைத்தவிர இவர்களைப் பற்றி சொல்ல ஒன்றும் பெரிதாய் இல்லை.
புது வில்லன்கள்…அடியாட்களுடன் வருகிறார்கள்… கர்ஜிக்கிறார்கள்…பின்னர் செத்துப்போகிறார்கள்.

நாசர் வரும் காட்சிகள் அருமை. அவரின் அனுபவம் அவருக்கு பிளஸ்.
ஏட்டு தம்பி ராமய்யா மாதவனுடன் சேர்ந்து கலக்கி இருக்கிறார்.
வில்லனின் அடியாட்கள் வரும் ரயில் வண்டியில் அவர்களுக்குத் தெரியாமல் சரக்குகளை கடத்துவது, படம் முழுக்க காமெடியன்கள் இல்லாமல் இழையோடும் நகைச்சுவை, வித்தியாசமான சண்டைகாட்சிகள், “எனக்கே ஷட்டரா” என மாதவன் பேசும் வசனம், ஆங்காங்கே லிங்குசாமியின் டச்.

தமிழ் பட இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இன்னும் எத்தனைப் படங்களில் …

  • கதாநாயகன் ஒரே நேரத்தில் இருபதுப்பேரை தாக்குவான்?
  •  போலீஸ்காரர்கள் வில்லன்களிடம் அடிவாங்கும் சிரிப்பு போலீஸாய் இருக்கப்போகிறார்கள்?
  • அமெரிக்கன் மாப்பிள்ளைகள் இளிச்சவாயன்களாக வரப்போகிறார்கள்?
  • வில்லன்கள் போலீஸ் வீட்டுப் பெண்களை துருப்புச் சீட்டாய் துன்புறுத்தப்போகிறார்கள்?
  • ஓரே பாடலில் கோழையை பலசாலியாக்கப்போகிறீர்கள்?

யதார்த்த சினிமாக்கள் தலைத்தூக்கும் இந்த கால கட்டத்தில் அரைத்த மாவையே எத்தனை முறை அரைப்பீர்கள்? இயக்குனர்கள் சிந்திக்கவும்!

என்ன ஆச்சு யுவனுக்கு? ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற பாடல்கள் நினைவில் இல்லை.பின்னணி இசையில் நிறைய இடங்களில் தொய்வு. “பையா” கூட்டணியா இது? ( கல்யாண நேரத்தில் சப்தமாக கேட்டுக்கொண்டிருக்கும் வாத்திய மேள ஓசை…ஆர்யா பேச ஆரம்பித்தவுடன் சட்டென்று நின்றுவிடுகிறது – இது போல் பல உதாரணங்கள்).

யாரோ சொல்லியிருக்கிறார்கள் போல…இயக்குனர்கள் ஒரு காட்சியில் வந்தால் படம் ஓடுமென்று.லிங்குசாமியும் ஒரு காட்சியில் வந்துப்போகிறார்.

“வேட்டை…. இது புலி வேட்டையல்ல எலி வேட்டை!

Related Posts:

«

உங்கள் கருத்து / Leave a Reply